தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தக்‌சின் ஷினவாத் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும்: தாய்லாந்து உச்ச நீதிமன்றம்

2 mins read
8a5c6bb8-39c5-4f7a-950d-913428b35f0a
தீர்ப்பு அறிவிக்கப்படும்போது திரு தக்சின் ஷினவாத்தும் அவரது மகள் பெடோங்டார்னும் நீதிமன்றத்தில் இருந்தனர். - படம்: புளூம்பர்க்

பேங்காக்: தாய்லாந்து உச்ச நீதிமன்றம் முன்னாள் பிரதமரும் பெருஞ் செல்வந்தருமான தக்‌சின் ஷினவாத் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

தாய்லாந்து அரசியல் களத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அசைக்கமுடியாத சக்தியாக விளங்கிய தக்சின் குடும்பத்திற்குத் தற்போது அடுத்தடுத்து அடி விழுந்துள்ளது.

தீர்ப்பு அறிவிக்கப்படும்போது தக்சின் நீதிமன்றத்தில் இருந்தார். அவரை விரைவில் காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவார்கள் என்று கூறப்பட்டது.

சில நாள்களுக்கு முன்புதான் தக்‌சினின் மகள் பெடோங்டார்ன் ஷினவாத் தாய்லாந்துப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெடோங்டார்ன், கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையில் நெறிமுறை தவறி நடந்துகொண்டதாகத் தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரைப் பதவியிலிருந்து நீக்கியது.

76 வயதான திரு தக்சின் 2001ஆம் ஆண்டு தாய்லாந்துப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் 2005ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ராணுவப் புரட்சியால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி பியூ தாய் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து அவர் நாட்டுக்குள் மீண்டும் வந்தார்.

இருப்பினும் திரு தக்‌சின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் தாய்லாந்து மன்னர் அந்தத் தண்டனையை ஓராண்டாகக் குறைந்தார்.

தக்‌சின் மருத்துவக் காரணங்களால் சிறைக்குச் செல்லவில்லை. அவர் அதிநவீன வசதிகொண்ட மருத்துவமனையில் தடுத்துவைக்கப்பட்டார்.

தக்‌சின் ஆறுமாத காலம் மருத்துவமனையில் தடுத்துவைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் வயது முதிர்ந்த கைதி என்ற கணக்கில் தண்டனைக் காலம் முடியும் முன்னரே வெளிவந்தார்.

தக்சினின் கட்சி அவருக்கு ஆதரவாக நடந்துகொண்டு சிறைத் தண்டனையை ஏமாற்றுவதாகக் குரல் எழுந்தது. மேலும் மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டது சிறைத் தண்டனை இல்லை என்றும் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து தக்சின்மீது விசாரணை நடத்தப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்