பேங்காக்: தாய்லாந்தின் செல்வாக்குமிக்க முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் தமது ஓராண்டு சிறைத்தண்டனைக்கு அரச மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் செப்டம்பர் 29ஆம் தேதி தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2023ல் 15 ஆண்டுகள் சுயமாக நாடு கடந்து வாழ்ந்த பிறகு தாய்லாந்து திரும்பிய பின்னர், மருத்துவமனையின் முக்கிய பிரமுகர் பிரிவில் ஆறு மாதங்கள் கழித்த பின்னர், திரு தக்சின் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவிக்கவில்லை என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
76 வயதான தக்சின், 2001 முதல் 2006 வரை பிரதமராக இருந்தபோது, கடமைக்கும் சொந்த நலனுக்கும் இடையே உள்ள முரண்பட்ட நிலை மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவற்றுக்காக ஆரம்பத்தில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் அவரது தண்டனை மன்னரால் ஓர் ஆண்டாகக் குறைக்கப்பட்டது.
சட்ட வழக்குகளை முடித்த அனைத்து கைதிகளுக்கும் பொருத்தமான ஒரு செயல்முறையான அரச மன்னிப்புக்கு திரு தக்சின் வைத்திருக்கும் கோரிக்கை, அவரது தற்போதைய சிறைவாசத்தைக் குறைக்க வழிவகுக்கும்.
“அரச மன்னிப்புக்கான மனு சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இது ஒவ்வொரு கைதியின் உரிமை,” என்று தக்சினின் வழக்கறிஞர் திரு வின்யாட் சார்ட்மோன்ட்ரீ செய்தியாளர்களிடம் கூறினார்.