சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் வரவிருந்த தக்சின் துபாயில் தரையிறங்கினார்

1 mins read
b3eed57e-fc34-45b0-a07d-21b094673cd7
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் மருத்துவப் பரிசோதனைக்காகச் சிங்கப்பூர் வரவிருந்தார். தனி விமானம் மூலம் சிலேத்தார் விமான நிலையத்தில் தரையிறங்கத் திட்டமிட்டமிட்டிருந்த அவர், விமான நிலையச் செயல்பாட்டு நேரத்தைத் தவறவிட்டதால் துபாய் சென்றார்.

76 வயது பெருஞ்செல்வந்தரான அவர், செப்டம்பர் 4ஆம் தேதி இரவு பேங்காக்கிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டார். சிங்கப்பூரில் இருந்த காலத்தில் தமக்குச் சிகிச்சை அளித்த மருத்துவரைச் சந்திக்க அந்நாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தமது ‘எக்ஸ்’ தளப் பதிவில் தக்சின் கூறினார்.

மேலும், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த குடிநுழைவுச் சோதனை காரணமாகத் தம்மால் இரவு 10 மணிக்குள் சிலேத்தார் விமான நிலையத்திற்குக் குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தனியார் ஜெட் விமானச் சேவை வழங்கும் சிலேத்தார் விமான நிலையம், தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும்.

சிங்கப்பூரில் தரையிறங்க முடியாததால், எமது பயணத் திட்டத்தை மாற்றியமைத்து துபாய்க்குச் செல்ல முடிவுசெய்தேன் என்றார் தக்சின்.

துபாயில், எலும்பியல் நிபுணரையும் நுரையீரல் மருத்துவரையும் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்றதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்