துபாய்: ஈரானியப் போருக்கு இடையிலும் துபாய் நகரில் உள்ள கடைகளில் பொருள்களுக்குத் தட்டுப்பாடு இல்லை.
உணவுத் தொழில்துறையினர் ஏற்கெனவே பழக்கப்பட்ட தளவாடக் கட்டமைப்புகளைக் கடைப்பிடிப்பதே அதற்குக் காரணம். கொவிட்-19 பெருந்தொற்றின்போதும் 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போதும் அந்தக் கட்டமைப்புகள் நிறுவப்பட்டன.
துபாய் அரசாங்கம், அடுத்த சில மாதங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகளுக்கு உத்தரவாதம் தந்துள்ளது. பொருள்களின் விலைகளைக் கவனித்துவருவதாகவும் அது கூறியது.
மத்திய கிழக்குப் போர் விநியோக நடவடிக்கைகளைப் பாதித்துள்ளது. துபாய் தனக்கான உணவுப் பொருள்களில் ஏறக்குறைய 90 விழுக்காட்டை இறக்குமதி செய்கிறது. இந்நிலையில், அவை தொடர்ந்து கிடைப்பதை எவ்வாறு உறுதிசெய்வது எனும் பெரிய சவாலை அது எதிர்நோக்குகிறது.
தற்போதைய நிலவரப்படி, வாடிக்கையாளர்களுக்கான இடையூறு மிகவும் குறைவாக உள்ளது. ஆனால், இது எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. துபாய் உள்ளிட்ட வளைகுடாப் பகுதிகள் ஈரானிய ஏவுகணைகளாலும் ஆளில்லா வானூர்திகளாலும் தாக்கப்பட்டதால் அங்கு நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பூசலால் முக்கியக் கப்பல் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. எண்ணெய்ச் சந்தையும் தங்கத்தின் விலையும் ஆட்டங்கண்டுள்ளன.
இந்திய அரிசி, ஆஸ்திரேலிய இறைச்சி, இந்தோனீசியக் காப்பி முதலியவற்றின் வர்த்தகம் தேக்கமடைந்துள்ளது.
உணவு நிறுவனமான லுலு, பல இடங்களிலிருந்து சரக்கு விமானங்களின்மூலம் பொருள்களைத் தருவிக்கத் தொடங்கியுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சைஃபி ரூபவாலா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே அந்த நிறுவனம் இந்தியாவிலிருந்து இறைச்சி, பழங்கள், காய்கறிகள் முதலியவற்றை இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டது. தென்னாப்பிரிக்கா, இலங்கை, கென்யா முதலியவற்றிலிருந்து பொருள்களைத் தருவிக்க கூடுதல் விமானச்சேவைகளுக்கும் அது ஏற்பாடு செய்கிறது. எட்டிஹாட் விமானத்தில் குறைந்தது 80 டன் பொருள்கள் கொண்டுவரப்படுவதாகத் திரு ரூபவாலா சொன்னார்.
அந்நிறுவனம் மும்பையிலிருந்து ஏறக்குறைய 500 கொள்கலன்களில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அனுப்புகிறது. மற்றச் சில்லறை வர்த்தகர்களுக்கும் அது உதவிக்கரம் நீட்டி வருகிறது.
கடைகளில் பொருள்கள் தொடர்ந்து கிடைப்பதையும் விலைகள் நிலையாக இருப்பதையும் உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் திரு ரூபவாலா குறிப்பிட்டார். துபாய் அரசாங்கம் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் தளவாடச் செலவுகளில் தள்ளுபடி வழங்குவதாகவும் அவர் சொன்னார்.
“இரண்டு மாதங்களுக்குப் போதிய அளவுக்கு உணவுப் பொருள்கள் உள்ளன. ராணுவ நடவடிக்கைகள் அதுவரை தொடரும் என்று கருதவில்லை,” என்று ஹேம்பர்கில் உள்ள மத்திய கிழக்கு ஆய்வுகளுக்கான கிகா கல்வி நிலையத்தின் இயக்குநர் எக்கார்ட் வோர்ட்ஸ் தெரிவித்தார்.
“ஹோர்முஸ் நீரிணையில் இடையூறு ஏற்பட்டால் அனைவருக்கும் இழப்புத்தான்,” என்றார் அவர்.

