வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வெகு விரைவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினையும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியையும் சந்திப்பதற்கு நல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளார்.
திரு புட்டினுக்கும் அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃபுக்கும் இடையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெற்ற பேச்சு ஆக்ககரமாய் அமைந்ததாக அவர் சொன்னார். கிரெம்ளினும் முன்னதாக அதே கருத்தைத் தெரிவித்திருந்தது.
உச்சநிலை மாநாட்டில் சந்திக்க தலைவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனரா என்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரிடம் கேட்கப்பட்டது. அதற்கு மிகவும் நல்ல வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார். இருப்பினும் மேல் விவரங்களைத் திரு டிரம்ப் வெளியிடவில்லை.
திரு புட்டினுடன் திரு விட்காஃப் நடத்திய பேச்சு குறித்து ஐரோப்பிய நட்பு நாடுகள் சிலவற்றுக்கு விவரம் அளித்திருப்பதாகத் திரு டிரம்ப் அவரின் ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார்.
“போர் முடிவுக்கு வரவேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். வரும் நாள்களிலும் வாரங்களிலும் அதை எட்டுவதற்கு நாங்கள் பணியாற்றுவோம்,” என்றார் அவர்.
உக்ரேனில் சண்டையை நிறுத்துவதற்கு ரஷ்யா வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆகஸ்ட் 8) இணங்க வேண்டும் என்று திரு டிரம்ப் காலக்கெடு விதித்துள்ளார். இல்லையென்றால் ரஷ்யாவுக்கு எதிராகப் புதிய தடைகள் விதிக்கப்படும் என்று அவர் மிரட்டுகிறார்.
இந்நிலையில்தான் உச்சநிலை மாநாடு குறித்துக் கருத்துரைத்துள்ளார் திரு டிரம்ப்.
திரு விட்காஃபின் ரஷ்யப் பயணம் குறித்து அமெரிக்க அதிபருடன் பேசியதாகத் திரு ஸெலென்ஸ்கி கூறினார். அந்தத் தொலைபேசி அழைப்பில் ஐரோப்பியத் தலைவர்களும் கலந்துகொண்டதாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
பணம் இல்லை என்ற நிலை வரும்போதுதான் ரஷ்யா அமைதியை நோக்கி அடியெடுத்து வைக்க முயற்சி செய்யும் என்று திரு ஸெலென்ஸ்கி சில காலமாகவே எச்சரித்து வருகிறார்.
புதிய தடைகள் குறித்துத் திரு டிரம்ப் எச்சரித்திருக்கும் நிலையிலும் உக்ரேனில் பெரிய அளவில் தாக்குதல்களைத் தொடர்கிறது ரஷ்யா.
அமெரிக்க அதிபராக இரண்டாம் முறை பதவியேற்கும் முன்னர், ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரை ஒரே நாளில் தம்மால் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று கூறியிருந்தார் திரு. டிரம்ப். ஆனாலும் போர் நின்றபாடில்லை, நீடிக்கிறது.