கோலாலம்பூர்: போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்கின் பதவி விலகல் குறித்த கடிதம் தமக்குக் கிடைத்திருந்தாலும், அது தொடர்பாக அரசாங்கம் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னதாக, இந்த விவகாரம் குறித்துக் கவனமாகச் சிந்திக்க வேண்டியது அவசியம் என்று திரு அன்வார் கூறினார்.
“நான் அந்தப் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை. கடிதம் எனக்குக் கிடைத்துள்ளது. திரு லோக் அது உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து கவனமாகச் சிந்திக்க நான் நிச்சயமாக அவகாசம் எடுத்துக்கொள்வேன்,” என்று வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 13) பிரிக்ஃபீல்ட்சில் உள்ள மதரஸத்துல் கௌதிய்யா சுராவில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தம் மீதுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்கலாம் என்று செவ்வாய்க்கிழமையன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, டிஏபி கட்சியின் தலைமைச் செயலாளரான திரு லோக், உடனடியாகப் பதவி விலகும் தனது முடிவை வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.
இருப்பினும், தாம் உட்பட 40 டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், தமது பதவி விலகல் அரசாங்கத்திற்குள் எந்தப் பிளவுகளையும் குறிக்கவில்லை என்றும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரான திரு லோக் கூறினார்.
இதற்கிடையில், மலாக்கா மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த திரு அன்வார், விவாதங்கள் வழக்கம்போல் நடைபெற்றதாகவும், தேர்தலின்போது ஏற்படும் அதிகரித்த அரசியல் பதற்றங்கள் தற்காலிகமானவை என்றும் தேர்தல் செயல்முறை முடிந்தவுடன் அவை தணியக்கூடும் என்றும் விவரித்தார்.
“தேர்தல் காலங்களில் அரசியல் பதற்றங்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் இன்றைய கூட்டம் வழக்கம்போலவே நடைபெற்றது. எந்தவிதச் சிக்கல்களையும் நான் கவனிக்கவில்லை,” என்று அவர் கூறினார். மேலும், துணைப் பிரதமர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கான மேம்பாட்டுப் பணிகள், வசதிகள் குறித்து விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.
