மாஸ்கோ: மாஸ்கோ, மரியாதையுடன் நடத்தப்பட்டால் உக்ரேனுக்குப் பிறகு எந்தப் போரும் இருக்காது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியிருக்கிறார்.
ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா தாக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படும் தகவலை அர்த்தமற்றது என்று அவர் நிராகரித்தார். ரஷ்ய அதிபர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) நடைபெற்ற வருடாந்தர ஆண்டிறுதிச் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். ரஷ்ய அரசாங்கத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அது, ஏறக்குறைய நாலரை மணி நேரம் நீடித்தது.
மாஸ்கோ, ஏதேனும் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிடுகிறதா என்று ரஷ்ய அதிபரிடம் கேட்கப்பட்டது. உக்ரேன்மீது ரஷ்யா 2022ல் படையெடுத்ததைத் திரு புட்டின் அவ்வாறுதான் குறிப்பிட்டிருந்தார்.
“உங்களின் நலன்களை மதிக்க நாங்கள் எப்போதும் முயன்றுள்ளதைப் போன்று நீங்களும் எங்களின் நலன்களை மதித்து நடந்தால் இனிமேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது,” என்றார் அவர்.
ஐரோப்பாவுடன் போர் புரிய ரஷ்யா திட்டமிடவில்லை என்று இம்மாதத் தொடக்கத்தில் திரு புட்டின் கூறியிருந்தார். ஆனால் ஐரோப்பியர்கள் விரும்பினால், ‘இப்போதே தயார்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தின் மூலம் ஏமாற்றியதைப் போன்று தாங்கள் ஏமாற்றப்படாமல் இருந்தால், ரஷ்யா இனிமேல் படையெடுக்காது என்பதைத் திரு புட்டின் தெளிவுபடுத்தினார்.
ரஷ்யாவில் இருக்கும் செய்தியாளர்களுடன் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கேள்விகளை முன்வைத்தனர். திரு புட்டின் அமர்ந்திருந்த இடத்திற்குப் பின்புறத்தில் ரஷ்யாவின் வரைபடம் இருந்தது. கிரைமியா உட்பட உக்ரேனில் கைப்பற்றப்பட்ட பகுதிகளும் அகண்ட ரஷ்யாவைக் காட்டிய அந்த வரைபடத்தில் இடம்பெற்றிருந்தன.
அதிபரிடம் வினவ, மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டதாக ரஷ்யத் தொலைக்காட்சி தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
நேர்காணல் முடிந்த ஒருசில மணி நேரத்தில், உக்ரேனின் ஒடெசா வட்டாரத்தில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கீவ் கூறியது. அதில் 7 பேர் மாண்டதாகவும் 15 பேர் காயமுற்றதாகவும் உக்ரேன் தெரிவித்தது.
உக்ரேனில் அமைதியான முறையில் போரை முடித்துக்கொள்ள ஆயத்தமாகவும் ஆர்வமாகவும் இருப்பதாக அவர் கூறினார். ஆனால் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதைத் திரு புட்டின் தெளிவுபடுத்தினார்.

