தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் குடும்பத்தால் கைவிடப்பட்ட முதியோர் அதிகரிப்பு

2 mins read
b7309ef3-85a5-4adc-84d3-7ef9892b59ca
சொந்த குடும்பங்களால் முதியோர் கைவிடப்படும்போது, அவர்கள் நலன் கருதி, அவர்களைப் பராமரிக்க ஏற்படும் செலவை ஏற்றுக்கொள்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய பெரும்பாலான முதியோர் இல்லங்கள் தெரிவித்தன.. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் சொந்த குடும்பங்களால் கைவிடப்படும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் மக்கள்தொகை 33.7 மில்லியன். அதில் 65 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் ஏறத்தாழ 2.5 மில்லியன் பேர் என்று 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டின. இந்த எண்ணிக்கை 2030க்குள் 4.5 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதுமை அடைந்த தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களை நேரில் சென்று பார்க்காமல் அவர்களது பராமரிப்புக்கான மாதக் கட்டணங்கள் செலுத்துவதை நிறுத்துவதே குடும்பத்தால் கைவிடப்படுவதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது என்று மலேசியாவில் உள்ள முதியோர் இல்லங்களை நடத்துபவர்களுக்கான சங்கம் தெரிவித்தது.

அத்தகைய நிலை முதியோருக்கு ஏற்படும்போது அவர்கள் நலன் கருதி, அவர்களைப் பராமரிக்க ஏற்படும் செலவை ஏற்றுக்கொள்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய பெரும்பாலான முதியோர் இல்லங்கள் தெரிவித்தன.

“நான் நடத்தி வரும் முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒருவர், அவரது குடும்பத்தாரால் கைவிடப்பட்டுள்ளார். அதனால் அவர் மீது இரக்கம் கொண்டு அவரைப் பராமரித்து வருகிறேன். முதியோர் இல்லத்தில் இருக்கும்போது அவருக்குத் தரமான பராமரிப்பு கிடைக்கிறது,” என்று டிரினிட்டி கேர் சென்டரின் உரிமையாளர் தாஸ் லூர்து கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமது முதியோர் தாதிமை இல்லத்தில் இரு முதியவர்களின் குடும்பத்தினர் அவர்களைக் கைவிட்டுவிட்டதாக கோல்டன் பீக்காக் கேர் சென்டரின் உரிமையாளர் திரு சந்தோக் சிங் தெரிவித்தார்.

அந்த முதியவர்களின் குடும்பங்கள் நிதி பிரச்சினையால் பாதிக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது என்று அவர் கூறினார். குறிப்பாக, முதியோர் தாதிமை இல்லத்தில் இருக்கும் முதியவர் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சைக்கான கட்டணம் அதிகமாக இருந்தால் முதியவர்களை அவர்களது குடும்பத்தார் கண்டுகொள்வதில்லை என்றார் அவர்.

2018 முதல் 2022 ஜூன் வரை நாடு தழுவிய நிலையில் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்ற முதியவர்களை அவர்களது குடும்பத்தினர் கைவிட்டதாக மலேசியாவின் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் ஐமான் அதிரா சாபு 2023 மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவில் உள்ள முதியோர் இல்லங்களில் சிங்கப்பூரரைச் சேர்ந்த முதியவர்கள் சிலர் தங்கள் குடும்பங்களால் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்