கோலாலம்பூர்: மலேசியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ரசிகர்கள், சரியான ஆடை அணிவது, நாகரீகமாக நடந்துகொள்வது, நாட்டின் கலாசாரம் மற்றும் சமய வழிமுறைகளை மதிப்பது உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“இசை நிகழ்ச்சியின் அனுபவத்தைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படவில்லை, அனைவரும் உள்ளூர் நடைமுறைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இசை நிகழ்ச்சியை ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு,” என்று மலேசியாவின் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.
“இசை நிகழ்ச்சி நடக்கும் இடம் சட்ட ஒழுங்கை மீறும் அல்லது அருவருப்புதக்க நடவடிக்கைகள் நடக்கும் இடமாக இருக்கக்கூடாது. மேலும் அங்கு ஆயுதங்கள், மது, போதைப்பொருள், அரசியல் அல்லது சமயம் தொடர்பான சின்னங்கள் அனுமதிக்கப்படாது,” என்று அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அண்மையில் மலேசியாவின் தகவல் அமைச்சு, வெளிநாட்டிலிருந்து வரும் இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிக்கான விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தது.
அதில் ரசிகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பு மக்களும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ரசிகர்கள் சரியான உடை அணியாமல் இருந்தாலோ, அநாகரீகமாக நடந்துகொள்வதோ, தவறான கோஷங்கள் எழுப்புவதோ அல்லது பொருள்களை வீசுவதோ உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் இசை நிகழ்ச்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள்.
வெளிநாட்டுக் கலைஞர்கள் மலேசியாவின் கலாசாரம், சமயம் மற்றும் சட்டம் தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் பொறுப்பு என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆண் கலைஞர்கள் பெண்களின் உடைகளை அணியக்கூடாது. அதேபோல் கலைஞர்கள் தங்களது உடைகளை மேடையில் அகற்றக்கூடாது. மேலும் கலைஞர்கள் மார்புப் பகுதி தெரிவது போலவோ, மூட்டுப் பகுதிக்குக் குறைவாகவோ ஆடை அணியக்கூடாது.
தொடர்புடைய செய்திகள்
இஸ்லாமிய பொது விடுமுறை தினங்களில் 5,000க்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்ட இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. சமய அமைப்பிடமிருந்து அனுமதி பெற்றால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படும்.
2023ஆம் ஆண்டு மேட்டி ஹீலே என்னும் இசைக் கலைஞர் நிகழ்ச்சியின்போது மலேசியாவின் ஓரினப் பாலியல் கொள்கைக்கு எதிராகப் பேசினார். மேலும் மேடையில் மற்றொரு ஆணுக்கு முத்தம் கொடுத்தார்.
இச்சம்பவத்தை அடுத்து மலேசியாவில் இசை நிகழ்ச்சி தொடர்பாகக் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.

