பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்டோர் எந்தக் கட்சியிலும் சேரலாம்: சட்ட, அரசியல் வல்லுநர்கள்

பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்டோர் எந்தக் கட்சியிலும் சேரலாம்: சட்ட, அரசியல் வல்லுநர்கள்

2 mins read
cccac331-677b-49ce-a480-bd7e4a12aedb
பெர்சத்துக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டோர் புதிய கட்சியைத் தொடங்கலாம் அல்லது சுயேச்சையாகவும் செயல்படலாம் என்கின்றனர் அரசியல் துறை நிபுணர்கள். - படம்: த ஸ்டார்

பெட்டாலிங் ஜெயா: பெர்சத்துக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஸைனுடின் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோதும் எதிர்த்தரப்பு தொடர்ந்து நிலையாய் இருப்பதாக அரசியல் வல்லுநர்களும் சட்டத் துறை நிபுணர்களும் கூறுகின்றனர். ‘த ஸ்டார்’ ஊடகம் அதனைத் தெரிவித்தது.

திரு ஹம்சாவும் அவரின் ஆதரவாளர்களும் புதிய கட்சியொன்றைத் தொடங்கி, பாஸ் கட்சியுடன் உறவைத் தொடர்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு ஹம்சாவின் ஆதரவாளர்கள் எந்தக் கட்சியில் வேண்டுமென்றாலும் சேரலாம் அல்லது புதியதொரு கட்சியைத் தொடங்கலாம் என்று சட்ட நிபுணர் முகம்மது ஹனிஃப் கத்ரி அப்துல்லா கூறினார். அவ்வாறு செய்வது கட்சித்தாவல் தடைச் சட்டத்திற்கு முரணாக இருக்காது என்றார் அவர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அவரின் கட்சியிலிருந்து நீக்கப்படுவதால் அவருடைய இடத்தை இழக்கமாட்டார் என்று மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 49(ஏ) பிரிவு கூறுகிறது.

“பெர்சத்துக் கட்சி, திரு ஹம்சாவையும் மேலும் 16 பேரையும் நீக்கியதை ஒப்புக்கொண்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து மக்களவை உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்கள் வேறொரு கட்சியுடன் இணையலாம், புதிய கட்சியைத் தொடங்கலாம் அல்லது சுயேச்சையாகச் செயல்படலாம். அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கமாட்டார்கள்,” என்றார் திரு ஹனிஃப்.

அரசமைப்புச் சட்ட வல்லுநர் இணைப் பேராசிரியர் கைரில் அஸ்மின் மொக்த்தாரும் அதே கருத்தை முன்வைத்தார். ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் நாடாளுமன்ற இடம் காலியாகாது என்றும் அதனால் இடைத்தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் எழாது என்றும் அவர் சொன்னார்.

யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியாவின் அரசியல் அறிவியல் துறை நிபுணர் பேராசிரியர் சிவமுருகன் பாண்டியன், எதிர்த்தரப்பு தொடர்ந்து நிலையாய் இருப்பதாகக் கூறினார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும்வரை பெரிக்கத்தான் நே‌ஷனல் கூட்டணியில் தற்காலிகமாகத் தொடரலாம் என்றார் அவர்.

“புதிய கட்சியைத் தொடங்குவது சாத்தியமே. ஆனாலும் அதற்கு அதிகச் செலவாகும், நேரமாகும், அது ஆபத்தானதும்கூட. அடித்தள ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை நிச்சயமாகச் சொல்லமுடியாது,” என்றார் டாக்டர் சிவமுருகன்.

திரு ஹம்சா தரப்பினர், அம்னோவுடன் இணையக்கூடிய சாத்தியத்தையும் அவர் நிராகரித்தார். மக்களிடையே அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறையக்கூடும் என்பதை அவர் காரணமாகச் சுட்டினார்.

திரு ஹம்சாவும் அவரின் ஆதரவாளர்களும் பெர்சத்துக் கட்சித் தலைவர் முஹைதீன் யாசினுக்குத் தொடர்ந்து நெருக்குதல் கொடுப்பர் என்று யுனிவர்சிட்டி டெக்னாலஜி மலேசியாவின் அரசியல் துறை வல்லுநர் மஸ்லான் அலி எதிர்பார்க்கிறார்.

“பாஸ் கட்சியும் திரு முஹைதீனை நெருக்கும். அதே நேரம் அக்கட்சி, அவரைக் காட்டிலும் திரு ஹம்சாவுடன் நெருக்கமாக வேலை செய்வதையே விரும்பக்கூடும்,” என்றார் டாக்டர் மஸ்லான் அலி.

குறிப்புச் சொற்கள்