வெள்ளத்தால் பள்ளி செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தவிப்பு

1 mins read
476f1d9e-b33e-4871-a80d-752d2f598d9c
கடந்த ஜூலை 28ஆம் தேதியன்று, வியட்னாம் தலைநகர் ஹனோயின் புறநகர்ப் பகுதியான பென் வோய் சிற்றூரைச் சூழ்ந்திருந்த வெள்ளம். - கோப்புப்படம்: ஏஎஃப்பி

ஹனோய்: வியட்னாமின் வடபகுதி திடீர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூலை மாதம் முதலே கனமழையாலும் திடீர் வெள்ளத்தாலும் மலைவாழ் பகுதிகள், குறிப்பாக வடமேற்கு வட்டாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் கிட்டத்தட்ட 29,000 வீடுகள் சேதமடைந்ததாகவும் 90,000 ஹெக்டர் பயிர்கள் நாசமாகிவிட்டதாகவும் ஜூலை இறுதியில் வியட்னாம் புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்திருந்தது.

சோன் லா மாநிலத்தில் ஏறக்குறைய 1.3 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் ஊரகப் பகுதிகளில் பாலங்கள் உடைந்துவிட்டதாகவும் சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டது.

வெள்ளத்தால் அம்மாநிலத்தில் 11 பேர் இறந்துவிட்டதாகவும் ஆயிரக்கணக்கான வீடுகளுடன் 29 பள்ளிக் கட்டடங்களும் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டது.

இதனால், அடுத்த மாதம் பள்ளி தொடங்கவுள்ள நிலையில் ஏறத்தாழ 4,500 குழந்தைகள் பள்ளிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

“மீட்புப் பணிகள் முடிய பல மாதங்களாகலாம். உடனடியாக இதில் தலையிடாவிடில், அக்குழந்தைகள் பல அபாயங்களை எதிர்கொள்ள நேரிடலாம்,” என்றார் அவ்வமைப்பின் இயக்குநர் லி தி தான் ஹுவாங்.

வெள்ளத்தால் இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் $111.29 மில்லியன் மதிப்பிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக வியட்னாம் புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்