கிழக்குச் சீனக் கடலில் திரண்ட ஆயிரக்கணக்கான சீன மீன்பிடிப் படகுகள்

கிழக்குச் சீனக் கடலில் திரண்ட ஆயிரக்கணக்கான சீன மீன்பிடிப் படகுகள்

படம்: ஏஎஃப்பி

13 Mar 2026 - 4:45 pm

1 mins read

தைப்பே: கிழக்குச் சீனக் கடலில் ஆயிரக்கணக்கான சீன மீன்பிடிப் படகுகள் அணிவகுத்தன.

வட்டார மோதலுக்குச் சீனா தயாராகி வருவதை இது குறிப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதிக்கான கப்பல் கண்காணிப்புத் தரவுகளைக் கண்காணித்துக்கொண்டிருந்தபோது, மீன்பிடிப்படகுகள் தலா 400 கி.மீ., நீளமுள்ள இரண்டு அணிகளாகத் திரண்டிருந்ததைக் கண்டதாகத் திரு ஜேசன் வாங் கூறினார்.

செயற்கைக்கோள் படங்கள், கப்பல் சமிக்ஞைத் தரவுகளை ஆய்வு செய்யும் ‘இன்ஜீனிஸ்பேஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக அவர் பணியாற்றி வருகிறார்.

வணிகக் கப்பல்களின் மோதல்களைத் தவிர்க்கப் பயன்படுத்தும் தானியங்கி அடையாள அமைப்பு மூலம், கிழக்குச் சீனக் கடலில் சென்ற ஆயிரக்கணக்கான கப்பல்களுக்கு இடையே இருந்த கிட்டத்தட்ட 2,000 மீன்பிடிப் படகுகளை அவர் கண்டார்.

500 மீட்டர் இடைவெளியில் நெருக்கமாகச் சென்ற அந்தப் படகுகள், பலத்த காற்று வீசிய நிலையிலும் சுமார் 30 மணி நேரம் தங்கள் நிலைகளை மாற்றாமல் இருந்ததாகவும் பின்னர் திடீரெனக் கலைந்து சென்றதாகவும் திரு வாங் குறிப்பிட்டார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று, தைவானுக்கு வடகிழக்கே கிட்டத்தட்ட 300 கி.மீ., தொலைவில் சீன மீன்பிடிப்படகுகள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் திரண்டதைத் தாங்கள் இதுவரை கண்டதில்லை எனக் கடல்சார்ந்த ராணுவ வல்லுநர்கள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

இவ்வாண்டு ஜனவரி தொடக்கத்திலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்