கோலாலம்பூர்: மலேசியாவில் சர்ச்சைக்குரிய நகர்ப்புற புதுப்பிப்புச் சட்டத்தை எதிர்த்து கோலாலம்பூரில் நடத்தப்பட்ட பேரணியில் இஸ்ரேலிய எதிர்ப்பு எதிரொலித்தது.
சனிக்கிழமை (அக்டோபர் 4) நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள், பாலஸ்தீன மக்களின் இருப்பிடங்களை இஸ்ரேல் கைப்பற்றுவதைப் போல மலேசியாவிலும் பொதுமக்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுவதாகக் குரல் எழுப்பினர்.
எதிர்த்தரப்பு பெரிக்காத்தான் நேஷனல் (PN) ஏற்பாடு செய்த அந்தப் பேரணியில் ஏறத்தாழ 4,000 பேர் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பாலஸ்தீன ஆதரவைப் பிரதிபலிக்கும் வகையில் கறுப்பு, வெள்ளை உடை அணிந்திருந்தனர்.
பேரணியில் சென்றவர்கள், ‘நகர்ப்புறப் புதுப்பிப்புச் சட்டத்தை ரத்து செய்’ என்று முழக்கமிட்டனர். பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராகவும் அவர்களில் சிலர் குரல் எழுப்பினர்.
காஸா விவகாரம் மலேசியாவில் உள்நாட்டு அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்துவதாக திரு அன்வாரை அவர்கள் குறைகூறினர்.
மேலும், இஸ்ரேலைத் தாங்கிப் பிடிக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை மலேசியாவுக்கு வருமாறு திரு அன்வார் அழைத்திருப்பதற்கு எதிராகவும் கண்டனப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் முழங்கினர்.
இம்மாத இறுதிவாக்கில் கோலாலம்பூரில் நடைபெற இருக்கும் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்க திரு டிரம்ப்பை திரு அன்வார் அழைத்திருந்தார். இருப்பினும், திரு டிரம்ப் மலேசியா வருவது பற்றி அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வெளிவரவில்லை.
சர்ச்சைக்குரிய நகர்ப்புற புதுப்பிப்பு மசோதாவைப் பரிந்துரைத்த ஜனநாயக செயல் கட்சி உறுப்பினரும் வீடமைப்பு, உள்ளாட்சித் துறை அமைச்சருமான இங்கா கோர் மிங்கிற்கு எதிராகவும் அவர்கள் குரல் எழுப்பினர்.
தொடர்புடைய செய்திகள்
ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் ஆகப்பெரிய கட்சியாக ஜனநாயக செயல் கட்சி உள்ளது. மலாய் மக்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான கட்சி என்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியினரால் அவ்வப்போது அந்தக் கட்சி விமர்சிக்கப்படுகிறது.