வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடிநுழைவுக் கொள்கைகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்களும் மாணவர்களும் பேரணி நடத்தி உள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) நடத்தப்பட்ட அந்தப் பேரணி பல்வேறு நகரங்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களைக் கடந்து சென்றது.
இரண்டாவது முறை அதிபராக திரு டிரம்ப் பொறுப்பேற்ற முதலாம் ஆண்டு நிறைவுநாளில், குடியேறிகளை ஒடுக்கும் அவரது கொள்கைக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.
வாஷிங்டன் நகரிலும் ஆஷிவில், வடகரோலினா போன்ற சிறுநகரங்களிலும் நூற்றுக்கணக்கில் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்கார்கள், குடிநுழைவு அடக்குமுறைக்கு எதிராகவும் அமெரிக்காவில் பாசிசப் போக்கு கூடாது என்பதை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியது காணொளிகளில் தெரிந்தது.
அதேநேரம், ஓஹியோ மாநிலத்தின் கிளீவ்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். “எங்களிடம் வெறுப்பு இல்லை; பயம் இல்லை; நாடற்றவர்களை வரவேற்கிறோம்,” என்று முழங்கியவாறே மாணவர்கள் அணி அணியாகச் சென்றனர்.
பள்ளிக்கூட மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். நியூ மெக்சிகோவின் சாண்டா ஃபேவில் வகுப்புகளைப் புறக்கணித்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். ‘குடிநுழைவு பயங்கரவாதத்தை நிறுத்து’ என்று அவர்கள் உரக்க முழக்கமிட்டனர்.
இன்டிவிசிபிள், 50501 போன்ற இடதுசாரிக் குழுக்களும் குடியேறிகளைத் தடுத்து வைக்கும் முகாம்களை எதிர்க்கும் தொழிலாளர் சங்கங்களும் அடித்தள அமைப்புகளுடன் இணைந்து போராட்டத்திற்கும் பேரணிக்கும் ஏற்பாடு செய்தன.
டெக்சஸ் மாநிலத்தின் எல் பாசோவில் உள்ள குடியேறிகள் தடுப்பு முகாமில் கடந்த ஆறு வாரங்களில் மூன்று குடியேறிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராகச் சோதனை நடத்துமாறு அதிபர் டிரம்ப் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் மில்லியன்கணக்கானோர் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற திரு டிரம்ப் தேர்தல் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

