மணிலா: பிலிப்பீன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டர்டே மீது பதவிநீக்கத் தீர்மானம் கொண்டு வருமாறு நாடாளுமன்றத்தை வலியுறுத்தி தலைநகர் மணிலாவில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பரித்தனர்.
பல மில்லியன் டாலர் மதிப்புள்ள அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் தவறான போக்கு தொடர்பாக மூன்றுவித பதவிநீக்கக் குற்றச்சாட்டுகளை திருவாட்டி டுட்டர்டே எதிர்நோக்குகிறார்.
மே மாத இடைக்காலத் தேர்தலுக்காக அடுத்த வாரம் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட உள்ள வேளையில் ஆர்ப்பாட்டம் கிளம்பி உள்ளது.
அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியருக்கும் துணை அதிபர் சாரா டுட்டர்டேவுக்கும் இடையில் விரிசல் அதிகரித்து வருகிறது.
46 வயது திருவாட்டி டுட்டர்டேவுக்கு ஆதரவாக ஒரு மில்லியன் பேர் பங்கேற்ற பேரணி நடைபெற்ற இருவார காலத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நிகழ்ந்துள்ளது.
நாடாளுமன்றம் தம் மீது குற்றம் சுமத்துவதற்கு முன்னதாக, மக்களிடையே தமக்கு இருக்கும் செல்வாக்கை உணர்த்த ஜனவரி 13ஆம் தேதி அவர் அந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், குற்றச்சாட்டுகளில் இருந்து அவரைப் பாதுகாக்கவே பேரணி நடத்தப்பட்டதாக அதிபருக்கு ஆதரவாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
அதிபர் தமது கடமைகளைச் செய்ய இயலாதபோது அதிபர் பொறுப்பை துணை அதிபர் ஏற்க வேண்டும் என்று பிலிப்பீன்ஸ் அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கிறது.