யங்கூன்: மியன்மாரின் வடக்குப் பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
மேலும் அவர்கள் மின்சாரம், கைப்பேசி இணைப்பு இல்லாமல் தவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில நாள்களுக்கு கனத்த மழை இருக்கும் என்று மியன்மார் வானிலை நிலையம் தெரிவித்துள்ளதால் அவ்வட்டாரத்தில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அதிக அளவில் பெய்த மழையால் கச்சின் மாநிலத்தில் உள்ள அயேயார்வாடி நதி ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.
மழையால் கட்டடங்கள் மூழ்கியதையும் பொதுமக்கள் கழுத்து வரை உயர்ந்த வெள்ள நீரில் நடந்து செல்வதையும் உள்ளூர் ஊடகங்கள் காட்டின.
வெள்ள நீரின் அளவு விரைவாக உயர்ந்து வருவதால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.
எரிபொருளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் எரிபொருளில் இயங்கும் படகுகள் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் தொடர்கின்றன.
வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நாடிவருகின்றனர். சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) வெள்ள நீரின் அளவு ஓரளவு குறைந்தது இருப்பினும் மழை தொடர்ந்து பெய்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.

