எல்லை திறக்க இஸ்ரேல் மறுப்பு: பல்லாயிரம் பாலஸ்தீனர்கள் தவிப்பு

1 mins read
065187d0-26ce-4856-861d-e7145ad4e08d
வடக்கு காஸாவில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்ப தென் காஸாவில் காத்துக் கிடக்கும் பாலஸ்தீனக் குடும்பங்கள். - படம்: இபிஏ

கெய்ரோ: எல்லைகள் திறக்கப்படாததால் வடக்கு காஸாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் செய்வதறியாது சாலைகளில் குவிந்துள்ளனர்.

எல்லை திறப்பு உத்தரவுக்காக காஸாவின் மத்திய வட்டாரத்தில் மக்கள் கடல் காத்துக்கொண்டு நிற்பதாகத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

போர்நிறுத்த உடன்பாட்டை ஹமாஸ் மீறிவிட்டதாகக் கூறி காஸா நகரங்களுக்கு இடையிலான எல்லைகளைத் திறக்க இஸ்ரேல் மறுத்து வருவதால் அந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீன பிணைக் கைதிகளை இஸ்ரேலும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸும் இரண்டாம் முறை விடுவித்ததற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு காஸா நோக்கிச் செல்லும் சாலைகளை அடைத்துக்கொண்டு அவர்கள் காத்துக் கிடப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது.

அவர்களில் பலர் வாகனங்களில் தொற்றியவாறு அனுமதிக்காகக் காத்துக் கிடக்கின்றனர்.

காஸா நகரத்துக்கும் வடக்குப் பகுதிக்கும் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்லத் தயாரான மக்கள் அனுமதி கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ளதாக காஸா நகருக்குத் திரும்பத் துடிக்கும் ஆடவர் ஒருவர் கூறினார்.

“எங்களது சொந்த வீடுகளுக்குத் திரும்புவதற்காகத்தானே உடன்பாட்டில் கையெழுத்திடப்பட்டது?” என்று அவர் ஆத்திரத்துடன் கேட்டார்.

“சொந்த ஊருக்குத் திரும்பக் காத்திருக்கும் பலருக்கும் தங்களது வீடு இன்னும் அப்படியே உள்ளதா என்று தெரியாது.

“எப்படி இருந்தாலும் பரவாயில்லை, குடிசை போட்டாவது பிழைத்துக்கொள்கிறோம் என்று பல்லாயிரம் மக்கள் தவியாய் தவித்துக்கொண்டு உள்ளனர்,” என்று தாமர் அல்-புராய் என்னும் அந்த ஆடவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்