பட்டாயா: போலியான ஃபேஸ்புக் பதிவுகள் மூலம் சுற்றுப் பயணிகளை ஏமாற்றிப் பணம் பறித்த மூவரை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த மூவரும் சுற்றுப் பயணிகளிடம் இருந்து கிட்டத்தட்ட 700,000 பாட் (S$28,000) மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று தாய்லாந்து காவல்துறையின் சுற்றுப் பயணப் பிரிவு வியாழக்கிழமை (மே 22) கூறியது.
மோசடிக்காரர்களைக் கைது செய்ய பட்டாயா மாநில நீதிமன்றம் பிறப்பித்த கைதாணையைத் தொடர்ந்து காவல்துறையினர் சந்தாபுரி, பேங்காக், அயுத்தாயா ஆகிய பகுதிகளில் தனித்தனியாக சோதனை நடத்தினர்.
அப்போது மூன்று ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.
பட்டாயா சுற்றுலாத்தலத்தில் உள்ள பிரபல ஹோட்டல்களின் ஃபேஸ்புக்கைப் போல போலியாக வடிவமைத்து ஹோட்டல் அறைகளுக்கு முன்பதிவு செய்யும் சுற்றுப் பயணிகளிடம் பணத்தை கட்டணமாக பரிமாற்றம் செய்யுமாறு கூறி மூவரும் மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறை கூறியது.
பிரபல ஹோட்டல்களில் மலிவான கட்டணத்தில் அறைகள் இருப்பதாக மோசடியாகக் கூறியும் சுற்றுப்பயணிகளிடம் அவர்கள் பணம் கறந்தனர்.
மூவரும் பட்டாயா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இனிமேல் குற்றம் சுமத்தப்படும்.
சுற்றுப் பயணிகள் தங்களுக்கான அறைகளை முன்பதிவு செய்யும்போது ஹோட்டல்களின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளத்தை சரிபார்க்குமாறு காவல்துறையின் சுற்றுப் பயணப் பிரிவு வலியுறுத்தி உள்ளது.

