ஆஸ்திரேலிய வெள்ளத்திற்கு மூவர் பலி; 50,000 பேர் திண்டாட்டம்

1 mins read
8557db4b-2668-44fc-a667-94350a2f421f
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம். - படம்: இபிஏ

சிட்னி: கிழக்கு ஆஸ்திரேலியாவில் வியாழக்கிழமையும் (மே 22) வெள்ளம் ஏற்பட்டது.

பலத்த மழையால் கடந்த இரண்டு நாள்களாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. சாலைகள் வெள்ள நீரில் மூழ்கிவிட்டன.

வெள்ளத்தில் சிக்கி 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிட் நார்த் கோஸ்ட் கடற்கரைப் பகுதியில் 63 வயது ஆடவர் ஒருவர் நீரால் சூழப்பட்ட வீட்டுக்குள் சடலமாகக் கிடந்ததை காவல்துறையினர் கண்டு, சடலத்தை மீட்டனர்.

அந்தப் பகுதி சிட்னியின் வடக்கே ஏறத்தாழ 400 கிலோமீட்டர் தூரத்தில், கரடுமுரடான மலைப் பகுதிகளையும் பள்ளத்தாக்குகளையும் உள்ளடக்கியதாகவும் ஆறுகள் சூழ்ந்ததாகவும் உள்ளது.

வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் ஏராளமானோர் வீடுகளின் மேல்பகுதியிலும் பாலங்களிலும் கார்களின் உச்சியிலும் தஞ்சம் புகுந்தனர்.

அவர்களைத் தேடி மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாகிவிட்டதாகவும் நகரங்களின் சாலைகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹண்டர், மிட் நார்த் கோஸ்ட், நியூ சவுத் வேல்ஸ் ஆகிய வட்டாரங்களில் உள்ள பல்வேறு கிராமப்புறப் பகுதிகளே மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்