ஹனோய் உணவகக் குண்டுவெடிப்பில் மூவர் உயிரிழப்பு

ஹனோய் உணவகக் குண்டுவெடிப்பில் மூவர் உயிரிழப்பு

படம்: விஎன்எக்ஸ்பிரஸ்

24 Nov 2026 - 8:42 pm

1 mins read

ஹனோய்: செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) ஹனோயில் உள்ள ஓர் உணவகத்தில், எரிவாயுக் கசிவின் காரணமாக ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வெடிவிபத்தில், மூன்று பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்தன.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் சன்னல்கள் நொறுங்கின, சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன, உலோகத் தடுப்புகள் அவற்றின் சட்டங்களிலிருந்து பிடுங்கப்பட்டன. அதே நேரத்தில் நெளிவுள்ள கூரைகளும் மேற்கூரைகளும் சரிந்து விழுந்தன என்று விஎன்எக்ஸ்பிரஸ் என்ற இணையச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வெடிவிபத்து அருகிலுள்ள வீடுகளைச் சேதப்படுத்தியதாகவும், அண்டை அடுக்குமாடிக் கட்டடங்களை உலுக்கியதாகவும், அதன் சிதறல்கள் தெரு முழுவதும் பரவியதாகவும் அந்த அறிக்கை கூறியது.

வெடிவிபத்து ஏற்பட்டபோது அந்த உணவகம் கூட்டத்தால் நிரம்பியிருந்ததால், இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில், உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்காகக் காவல்துறை கண்டறிதல் கருவிகளையும், கான்கிரீட் பலகைகளை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் இயந்திரங்களையும் பயன்படுத்தி வருவதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

கட்டமைப்பு ரீதியாக பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் அருகிலுள்ள கட்டடங்களில் இருந்து குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளனர் என்றும் அது கூறியது.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஆனால் கட்டடத்தின் ஒரு பகுதியை இடித்துத் தள்ளியது ஓர் எரிவாயு வெடிப்புதான் என்று முதற்கட்ட கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுவதாகவும் ஹனோய் காவல்துறை கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

மூளையில் கடுமையான காயம் அடைந்த ஒருவர் உட்பட 14க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்