பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள சாலையில் இரண்டு டுக்டுக் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்லும் நோக்குடன் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகின.
இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமை இரவு (பிப்ரவரி 3) நிகழ்ந்தது.
அந்த இரண்டு டுக்டுக் வாகனங்களில் ஒன்று வலது பக்கச் சாலைத் தடத்துக்கு மாற முற்பட்டபோது இன்னொரு வாகனம் அதன் மீது மோதியதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
வாகனம் மோதியதில் அந்த டுக்டுக் வாகனம் தூக்கி வீசப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அந்த டுக்டுக் வாகனம் சாலையில் கவிழ்ந்துக் கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் 28 வயது ஓட்டுநருக்குத் தலையில் பலத்த காயமும் ஆழமான வெட்டும் ஏற்பட்டன.
அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
விபத்துக்குள்ளான மற்றொரு டுக்டுக் வாகனத்தின் ஓட்டுநர், அவருடன் பயணம் செய்தவர் ஆகியோரின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
விபத்து குறித்து தாய்லாந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட டுக்டுக் வாகன ஓட்டுநர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டினார்களா என்பதை கண்டறிய ரத்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதன் முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

