ஜோகூரில் மூவர் கொலை: சந்தேக நபர்மீது ஏப்ரல் 27ல் குற்றச்சாட்டு

ஜோகூரில் மூவர் கொலை: சந்தேக நபர்மீது ஏப்ரல் 27ல் குற்றச்சாட்டு

2 mins read
7e328e2a-bf21-44dd-8fd6-ab6dbd5a494d
சந்தேக நபர் பகுதித் தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தி ஆறு முறை சுட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. - படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள ஓர் உணவகத்தில் மூன்று பேரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் 71 வயது முதியவர்மீது ஏப்ரல் 27ஆம் தேதியன்று கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுத்தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜோகூர் காவல்துறைத் தலைவர் அப்துல் ரஹ்மான் அர்சாத் தெரிவித்தார்.

“கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ், சந்தேக நபர்மீது கோத்தா திங்கி நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நாங்கள் அனுமதி பெற்றுள்ளோம்,” என்று அவர் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 24) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இக்குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் 12 பிரம்படிகள் வரையும் விதிக்கப்படலாம்.

சந்தேக நபர் ஒரு பகுதித் தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தி ஆறு முறை சுட்டதாகவும், சம்பவ இடத்திலிருந்து ஆறு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் திரு ரஹமான் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள், அந்த உணவகத்தை நடத்திவந்த 37 வயது வியட்னாமியப் பெண் மற்றும் 61, 63 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண் வாடிக்கையாளர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

“ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) நண்பகல் வாக்கில் தாமன் கோத்தா ஜெயா உணவகத்தில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு, சுமார் 50,000 ரிங்கிட் (S$16,092) கடன் காரணமாக நடந்ததாக நாங்கள் நம்புகிறோம்.

“சந்தேக நபர், கடந்த மூன்று ஆண்டுகளாக வியட்னாமியப் பெண்ணுக்குப் பல கட்டங்களாகக் கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர், தனது மறைந்த கணவரின் குடும்ப உணவகத்தை நடத்தி வந்தார்.

“இருப்பினும், அவர்களுக்கு இடையே எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதுவும் இல்லை,” என்று திரு ரஹமான் கூறினார்.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு பாகாங்கின் குவாந்தானில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் துப்பாக்கி உரிமத்தைச் சந்தேக நபர் வைத்திருக்கிறார் என்று திரு ரஹமான் மேலும் கூறினார்.

விவசாய நிலம் வைத்திருக்கும் அந்த நபருக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர்.

ஏப்ரல் 19ஆம் தேதி பிற்பகல் சுமார் 2 மணியளவில், சம்பவ இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அவர் கைது செய்யப்பட்டதாக ‘த ஸ்டார்’ நாளிதழ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்