பெய்ஜிங்: சீனாவில் தற்காப்புத் துறையுடன் தொடர்புபடுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சீனா தனது ராணுவத்தை நவீனமயமாக்க முயலும் வேளையில் அவர்கள் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. தற்காப்பு, விண்வெளி, அணுசக்தித் துறைகளைச் சேர்ந்தவர்கள் விசாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சீன விமானப் போக்குவரத்துத் தொழில்துறை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சோவ் ஸின்மின், அணுவாயுத ஆய்வாளர் லியு சாங்லி, சீன தேசிய அணுசக்தி நிறுவனத்தின் தலைமைப் பொறியியல் வல்லுநர் லுவோ சீ ஆகியோரே அந்த மூவர்.
நாட்டின் ஆக உயர் பதவியில் இருக்கும் ஜெனரல் ஷாங் யூஸியாவிடம் விசாரணை நடத்துவதாகக் கடந்த மாதம் (ஜனவரி) 24ஆம் தேதி தற்காப்பு அமைச்சு கூறியிருந்தது.
கடந்த ஓராண்டாக அதிபர் ஸி ஜின்பிங் ஊழலை ஒழிக்கக் கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அமைச்சு சொன்னது. சீனாவின் ராணுவத் தலைமைத்துவத்தில் திரு ஸிக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜெனரல் ஷாங் யூஸியா விசாரிக்கப்படுவதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. கட்டொழுங்கு, சட்ட விதிமுறைகளை அவர் மீறியதாகக் கூறப்பட்டது.
சீன நாடாளுமன்றத்தின் வருடாந்தரக் கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பதவிநீக்கம் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

