தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஜிஐஎஸ்பி’ பிரிவைச் சேர்ந்த மூவர் மீது ஆட்கடத்தல், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

2 mins read
e1c4904f-e623-48ce-9f2b-e5b6d9f40a3a
சிலாங்கூர், ராவாங்கில் உள்ள குளோபல் இக்வான் சர்விசஸ் அண்ட் பிஸ்னஸ் (ஜிஐஎஸ்பி) நிறுவனத்தின் தலைமையகம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

கோத்தா திங்கி: குளோபல் இக்வான் சர்விசஸ் அண்ட் பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் (ஜிஐஎஸ்பி) உறுப்பினர்கள் மூவர் மீது அக்டோபர் 13ஆம் தேதி அன்று கோத்தா திங்கி அமர்வு நீதிமன்றத்தில் பாலியல் மற்றும் ஆட்கடத்தல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோத்தா திங்கியில் உள்ள ‘ஜிஐஎஸ்பி’-க்கு சொந்தமான உல்லாசத் தளத்தின் மேலாளர்களாக இருந்த 57 வயதான மஹ்மத் ஹமால் துக்கிமான், 31 வயது ரபியதுல் அதாவியா முகம்மது ஷா ஆகியோர் மீது 30 மற்றும் 57 வயதுக்குட்பட்ட நான்கு நபர்களைக் கடத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

உல்லாசத் தளத்தில் பணிபுரியும் 20 வயது முஹம்மது அன்சருல்லா துக்கினோ, 16 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அக்டோபர் 13 அன்று செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹெய்டா ஃபரிட்சல் அபு ஹசன் முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறினர்.

குற்றப்பத்திரிகையின்படி, முகமது ஹமால், ரபியத்துல் அதாவியா மற்றும் இன்னும் தலைமறைவாக உள்ள மூன்று சந்தேக நபர்கள் - அஃபிசா அரிஃபின், முகமது சுஹைமி முகமது சானி, நோராஃபிரதுல் அபிடா இஸ்மாயில் ஆகியோர் மிரட்டல், கட்டாய உழைப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மூன்று பெண்களையும் ஓர் ஆணையும் கடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

2023 ஆகஸ்ட்டுக்கும் 2024 அக்டோபர் 1ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பண்டார் பெனாவார், லாடாங் சுங்கை பாப்பான், கம்போங் ஆயர் பிந்தானில் உள்ள இக்வான் உல்லாசத் தளத்தில் இந்தக் குற்றச்செயல் நடந்தது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் மஹ்மத் ஹமாலுக்கும் ரபியத்துல் அதாவியாவுக்கும் 50,000 ரிங்கிட் (S$15,216) மற்றும் முஹம்மது அன்சருல்லாவுக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 40,000 ரிங்கிட் பிணை வழங்கப்படலாம் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் அஹ்மது கைருடின் முன்மொழிந்தார்.

அவர்கள் தங்கள் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும். மேலும் வழக்கில் பாதிக்கப்பட்ட எவரையும் தொடர்புகொள்ளக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் மஹ்மத் ஹமால், ரபியத்துல் அதாவியா ஆகியோருக்கு 10,000 ரிங்கிட் பிணையும் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக கூடுதல் நிபந்தனைகளுடன் 10,000 ரிங்கிட் பிணையும் வழங்க நீதிமன்றம் அனுமதித்தது என்று தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்