சோல்: ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி, தென்கொரியப் பெரியவர்கள் நால்வரில் ஒருவர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட சுகாதாரத் தரங்களைப் பூர்த்தி செய்ய போதுமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
இதனால், அந்த நாடு உலகின் மிகவும் உடல் ரீதியாக செயலற்ற மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.
கொரிய நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு நிறுவனம், 2024ஆம் ஆண்டில் நாட்டில் 26.6 விழுக்காட்டு பெரியவர்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மிதமான முதல் தீவிரமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது. அதாவது நான்கு கொரியர்களில் கிட்டத்தட்ட மூன்று பேர் போதுமான உடற்பயிற்சி பெறுவதில்லை.
மிதமான உடல் செயல்பாட்டு தரநிலையில் வழக்கத்தை விட சற்று அதிக உடல் உழைப்பு தேவைப்படும் மற்றும் சற்று கனமான சுவாசத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகள் அடங்கும், அதாவது நீச்சல், இரட்டையர் டென்னிஸ், பூப்பந்து அல்லது லேசான பொருள்களை எடுத்துச் செல்வது போன்றவை. இவற்றை வாரத்திற்கு குறைந்தது ஐந்து முறை 30 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும்.
தீவிரமான செயல்பாடு என்பது, வாரத்திற்கு குறைந்தது மூன்று முறை 20 நிமிடங்களுக்கு ஓட்டம், நடைப்பயணம், வேகமாக சைக்கிள் ஓட்டுதல், சுவர்ப்பந்து போன்ற உடல் ரீதியாக, மிகவும் கடினமான மற்றும் அதிக சுவாசத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை உள்ளடக்கியது.
2021ஆம் ஆண்டில் தீவிரமான உடல் செயல்பாட்டு பங்கேற்பு விகிதம் 19.7 விழுக்காடாகக் குறைந்து, தொற்றுநோய்க்குப் பிறகு மெதுவாக மீண்டும் தற்போதைய 26.6 விழுக்காடாக உயர்ந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் விரும்பத்தக்க அளவை விட மிகக் குறைவாகவே உள்ளது என்று கொரிய நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.