தெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற மூன்று எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடியில் சிக்கித் தீப்பற்றிக்கொண்டதாக ஈரானின் கடற்படை, புரட்சிப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
நீரிணையைக் கடப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் கப்பல்கள் அத்துமீறி ஹோர்முஸ் நீரிணைக்குள் புகுந்ததாகக் கூறப்பட்டது.
அமெரிக்காவுடன் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் போர் மூண்டதை அடுத்து ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல விரும்பும் கப்பல்கள் உரிய அனுமதி பெறவேண்டும் என்ற ஈரான், அவ்வாறு செய்யாத கப்பல்கள்மீது தாக்குதல் தொடுத்துள்ளது.
இதற்கிடையே, கப்பலில் இருந்த ரேடாரையும் திசைக்காட்டிக் கட்டமைப்புகளையும் நிறுத்திய இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை ரகசியமாகக் கடக்க முற்பட்டதாக ஈரான் கடற்படை சுட்டியது.
அவ்வாறு கடக்க முயன்ற கப்பல்கள் கண்ணிவெடியில் சிக்கி தீப்பற்றிக்கொண்டன.
அதேபோல ரகசியமாக நீரிணையைக் கடக்க முற்பட்ட மூன்றாவது எண்ணெய்க் கப்பலும் கண்ணிவெடியில் சிக்கித் தீப்பற்றிக்கொண்டதை ஈரான் கடற்படை உறுதிப்படுத்தியது.
கப்பல்களின் பெயர்களையும் அவை எங்கிருந்து வந்தன என்பதையும் கடற்படை குறிப்பிடவில்லை. ஆனால் அவற்றுள் ஒன்று மிகப் பெரிய எண்ணெய்க் கப்பல் என்று அது சுட்டியது.
உத்திபூர்வ வர்த்தகப் பாதையை ஈரான் முடக்கியதற்குப் பதிலடியாக ஈரானியத் துறைமுகங்கள்மீது அமெரிக்கக் கடற்படை தடைகளை விதித்ததுடன், நீரிணையைப் பயன்படுத்தும் எண்ணெய்க் கப்பல்களுக்கு இராணுவப் பாதுகாப்பையும் வழங்கியது.
அண்மைய வாரங்களில் நீரிணையில் உள்ள பல கப்பல்களில் தீ விபத்துகள் அல்லது வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரானின் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.
மேலும், அந்தக் கப்பல்கள் கடற்கண்ணிவெடிகளில் மோதியதாக அவை பெரும்பாலும் கூறுகின்றன.
