பேங்காக்: அடுத்த ஐந்தாண்டுகளில் டிக்டாக் தளம் தாய்லாந்தில் US$8.8 பில்லியன் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்னிலக்க உள்கட்டமைப்பு, ஊழியரணி மேம்பாடு, இணையப் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிவைத்து இந்த முதலீடு இருக்கும் என்று டிக்டாக் தளத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தாய்லாந்து அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் கூறினார்.
அமேசான், கூகல், மைக்ரோசாஃப்ட் ஆகிய பெரிய தொழில்நுட்ப தளங்களை அடுத்து டிக்டாக் உரிமையாளர்களான சீனாவின் பைட்டான்ஸ் தற்பொழுது தாய்லாந்தில் தனது முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிக்டாக் தளத்தின் பொதுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் ஹெலினா லெர்ஸ்ச் தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத்தைப் பேங்காக்கில் வெள்ளிக்கிழமை சந்தித்து டிக்டாக் விரிவாக்கம் குறித்து விவாதித்தார்.
தாய்லாந்துப் பிரதமருடனான சந்திப்புக்கு முன் பேசிய ஹெலினா லெர்ஸ்ச், “டிக்டாக் தளத்தில் US$8.8 பில்லியன் முதலீடு செய்வது பற்றி இங்கு பேச வந்திருக்கிறோம்,” என்று கூறினார்.
இந்த முதலீடு குறித்து பெருமைபடப் பேசிய தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன், மின்னிலக்க மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடு நாட்டிற்கு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்றார்.
வர்த்தகங்கள், படைப்பாற்றல் உள்ளவர்கள், மோசடிக்கு எதிரான இயக்கங்கள், ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இந்த முதலீடு உதவும் என்று கூறப்படுகிறது.
தாய்லாந்தின் முதலீட்டு வாரியம் ஜனவரியில் அறிவித்த டிக்டாக் நிறுவனத்தின் US$3.8 பில்லியன் முதலீடு இந்தப் புதிய முதலீட்டில் அடக்கமா என்பது தெரியவில்லை.