தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பதவி ஏற்றதும் பல்வேறு உத்தரவுகளில் அதிபர் டிரம்ப் கையெழுத்து

4 mins read
ab5019ba-3272-447e-b39f-05bfa0056a1d
துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், மனைவி மெலனியா டிரம்ப் முதலானோர் முன்னிலையில், உத்தரவுகளில் கையெழுத்திட்ட அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: இபிஏ

வாஷிங்டன்: எதிர்பார்த்ததுபோலவே அதிபர் பதவி ஏற்றதும் பல்வேறு உத்தரவுகளில் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

எரிசக்தி விவகாரம் தொடங்கி, குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு மற்றும் குடிநுழைவுப் பிரச்சினை வரையிலான உத்தரவுகள் அவை.

அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு காணலாம்.

பொது மன்னிப்பு

2020 அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியுற்றதைத் தொடர்ந்து இரு மாதங்கள் கழித்து 2021 ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்தனர். அப்போது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு கலவரத்தில் முடிந்தது.

அது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திங்கட்கிழமை பதவி ஏற்றதும், அவர்களில் 1,500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி டிரம்ப் உத்தரவிட்டார்.

குடிநுழைவு

அமெரிக்க-மெக்சிகோ எல்லை வாயிலாக சட்டவிரோதக் குடியேறிகள் உள்ளே நுழையும் பிரச்சினையை தேசிய அவசரநிலையாக அறிவிக்கும் உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தாமாகவே அமெரிக்கக் குடியுரிமை பெறுவதைத் தடுப்பதற்கான உத்தரவு அது.

மேலும், அமெரிக்க அகதிகள் மறுகுடியேற்றத் திட்டத்தை குறைந்தபட்சம் நான்கு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். ஏராளமான புலம்பெயர்ந்தோரைத் தாங்கும் சக்தி அமெரிக்காவிடம் இல்லை என்று அவரது உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பைடன் உத்தரவுகள் ரத்து

பதவி ஏற்புக்கு முன்னர் பேரணியில் உரையாற்றிய திரு டிரம்ப், “முந்திய நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்ட ஏறத்தாழ 80 உத்தரவுகளை ரத்து செய்வேன். அவை அழிவையும் தீவிரத்தையும் கொண்டவை,” என்றார். இருப்பினும் அந்த 80 உத்தரவுகள் எவை என அவர் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் 2021ஆம் ஆண்டு ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளில் இருந்து கடந்த வாரம் வரை செயல்படுத்திய நடவடிக்கைகள் அவை. அதாவது, கொவிட்-19 விவகாரம் தொடங்கி தூய எரிசக்தித் தொழில்கள் வரையிலான அறிவிப்புகள் அவை.

டிக்டாக் தடை நிறுத்தி வைப்பு

டிக்டாக் கைப்பேசிச் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை 75 நாள்களுக்குத் தள்ளி வைப்பதற்கான உத்தரவில் திரு டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். அந்தச் செயலி ஜனவரி 19 முதல் தடை செய்யப்பட இருந்தது.

வேலை நியமனம் முடக்கம்

மத்திய அரசாங்க வேலைக்குப் புதிதாக ஆட்கள் நியமிக்கப்படுவதை முடக்குவதற்கான உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார். மேலும், அரசாங்கத்தின் புதிய ஒழுங்குமுறைகளை அமல்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

முழுநேர அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் அவர்கள் அனைவரும் நேரடியாக அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்றும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீனா மீது உடனடி வரிவிதிப்பு இல்லை

அதிபர் பதவியில் அமர்ந்த முதல் நாளே சீனா மீது வரிவிதிப்பதை டிரம்ப் தவிர்த்துவிட்டார். அதற்குப் பதிலாக, தமது முதலாம் தவணைக் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு சீனா இணங்கி நடந்துள்ளதா என்பதை விசாரிக்க அவர் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும், உலகளவிலான நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மீது கவனம் செலுத்தவும் தமது நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டார்.

திரு டிரம்ப்பின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விவரிக்கப்படவில்லை.

இருப்பினும், முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட வர்த்தகக் கொள்கைகளை மாற்றி அமைக்கும் எண்ணம் கொண்டவை அந்த நடவடிக்கைகள் என்பதை புளூம்பெர்க் ஊடகத்திற்குக் கிடைத்த நகல் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளான மெக்சிகோ மற்றும் கனடா மீது பிப்ரவரி 1 முதல் 25 விழுக்காட்டு வரியை திரு டிரம்ப் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுக்கான வரியை அதிகரிக்கப்போவதாக திரு டிரம்ப் இதற்கு முன்னர் கூறி வந்தார்.

ஃபென்டானைல் ரசாயன ஏற்றுமதியில் சீனா வகித்த பங்கும் பனாமா கால்வாயில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்ததால் டிரம்ப்பிற்கு ஏற்பட்ட கோபமும் அவர் அப்படிச் சொல்வதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

தற்போது கூடுதல் வரியை அவர் தவிர்த்துள்ளார். அதேநேரம் இனி எப்போது சீனா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்பதையும் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

மாறாக, சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திப்பது மற்றும் அழைத்துப் பேசுவதில் ஈடுபட இருப்பதாக அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேற்றம்

உலக சுகாதார நிறுவன அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த அமைப்பில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற அவர் உத்தரவிட்டு இருப்பது இது இரண்டாவது முறை.

ஜெனிவாவைத் தளமாகக் கொண்ட உலக சுகாதார நிறுவனம், கொவிட்-19 பெருந்தொற்றைக் கையாண்ட விதம் குறித்து, இதற்கு முன்னர் அதிபராக இருந்தபோது அதிருப்தி தெரிவித்து இருந்தார் டிரம்ப். அதனைத் தொடர்ந்து அந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான உத்தரவை அவர் பிறப்பித்தார்.

ஆயினும், அவருக்குப் பின் அதிபர் பொறுப்பை ஏற்ற ஜோ பைடன், அந்த முடிவை ரத்து செய்தார்.

தற்போது அதிபர் பதவி ஏற்ற கையோடு உத்தரவு பிறப்பித்து இருப்பதால் அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா முறைப்படி வெளியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்