தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்புடன் டிக்டாக் தலைமை நிர்வாகி சந்திப்பு

1 mins read
03733b4a-ab54-4cd1-bc66-1d83b27f5c5b
டிக்டாக் தலைமை நிர்வாகி சியூ சோவ் ஸி. - படம்: ராய்ட்டர்ஸ்

பாம் பீச், ஃபுளோரிடா: தேசியப் பாதுகாப்பு குறித்த கவலையால் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடைசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப்பை டிக்டாக் தலைமை நிர்வாகி சியூ சோவ் ஸி மார் ஏ லாகோவில் திங்கட்கிழமை (டிசம்பர் 16) சந்தித்தார்.

டிக்டாக் மீது விதிக்கப்படவுள்ள தடையை எப்படியாவது நீக்க தாம் முயற்சி செய்யப்போவதாக டிரம்ப் கூறிய சில மணி நேரம் கழித்து அந்தச் சந்திப்பு நடந்தது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது இளம் வாக்காளர்களைச் சென்றடைய டிக்டாக் தளத்தை டிரம்ப் பயன்படுத்தினார்.

மார் ஏ லாகோவில் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “டிக்டாக்கை நாங்கள் ஆராயவுள்ளோம். டிக்டாக்கிற்கு என் மனதில் தனியிடம் உள்ளது,” என்றார்.

முதல் தவணையாக அதிபராக இருந்தபோது 2020ல் டிக்டாக்கிற்கு தடைவிதிக்க டிரம்ப் முயற்சி செய்திருந்தார். ஆனால், அதுகுறித்த தமது நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொண்டுள்ளார்.

டிரம்ப்பும் திரு சியூவும் எதுபற்றி பேசினர் என்பது குறித்து தெரியவில்லை. இதுபற்றி கருத்துரைக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு டிக்டாக் பேச்சாளர் பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்