வாஷிங்டன்: டிக்டாக் சமூக ஊடகத் தளம் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) அமெரிக்காவில் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
அந்நாட்டில் டிக்டாக்கைத் தடைசெய்வதற்கான சட்டம் நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து அத்தளத்தின் சேவை சிறிது நேரத்துக்கு நிறுத்தப்பட்டது. தேசியப் பாதுகாப்பு தொடர்பில் டிக்டாக் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து செயல்பட திங்கட்கிழமையன்று (ஜனவரி 20) அடுத்த அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப் வகைசெய்ததாகவும் அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் டிக்டாக் கூறியது.
டிக்டாக்கை நடத்தும் பைட்டான்ஸ் நிறுவனம், அமெரிக்காவில் இயங்கும் தனது பிரிவை சீனர்கள் அல்லாத உரிமையாளர்களிடம் விற்க காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. அந்தக் கெடு முடிவுக்கு வந்ததையடுத்து கடந்த சனிக்கிழமை (ஜனவரி 18) பின்னிரவில் டிக்டாக், அமெரிக்காவில் அதன் சேவையை நிறுத்திக்கொண்டது.
அதனால், மில்லியன்கணக்கான டிக்டாக் பயனர்களால் அச்செயலியைப் பயன்படுத்த முடியாமல் போனது.
ஒப்பந்தம் ஒன்றை வரைவதற்குப் போதுமான காலம் வழங்கும் நோக்கில் திரு டிரம்ப், டிக்டாக்குக்கு எதிரான தடை செயல்படுத்தப்படுவதை ஒத்திவைக்கப்போவதாக உறுதியளித்திருந்தார். டிக்டாக்கின் கூட்டு உரிமையாளராக இருக்குமாறு அவர் தமக்குச் சொந்தமான ட்ரூத் சோஷியல் சமூக ஊடகதம் வழியாக அமெரிக்காவுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.
டிக்டாக்கில் அமெரிக்காவுக்கு 50 விழுக்காட்டுப் பங்கு இருக்கத் தாம் விரும்புவதாக திரு டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.