தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் டிக்டாக் செயல்பாடு நிறுத்தம்

2 mins read
9930c76e-7803-4eef-92b8-3b206afca6a5
‘தற்போது டிக்டாக் செயல்படவில்லை’ எனக் குறிப்பிடும் செய்தியைக் கைப்பேசியில் காட்டும் பயனர் ஒருவர். - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவில் டிக்டாக் மீதான தடை நடப்புக்கு வரவிருந்த நிலையில், சனிக்கிழமை (ஜனவரி 18) இரவு அச்செயலி தன் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டது.

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) அத்தடை நடப்புக்கு வருவதற்கு முன்னதாக ஆப் ஸ்டோர், கூகல் பிளே ஸ்டோர் தளங்களிலிருந்து டிக்டாக் மாயமானது.

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், திங்கட்கிழமை (ஜனவரி 20) தாம் பதவியேற்ற பிறகு டிக்டாக் மீதான தடையை அநேகமாக 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப் போவதாக சனிக்கிழமை கூறியிருந்தார். டிக்டாக் பயனர்களுக்கு அச்செயலி வழங்கிய குறிப்பு ஒன்றில், டிரம்ப்பின் வாக்குறுதியைச் சுட்டியது.

“அமெரிக்காவில் டிக்டாக்கிற்குத் தடை விதிக்கும் சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக, உங்களால் இப்போதைக்கு டிக்டாக்கை பயன்படுத்த இயலாது. நல்ல வேளையாக, அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு டிக்டாக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் தீர்வு குறித்து அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அதுவரை தயவுசெய்து காத்திருங்கள்,” என்று டிக்டாக் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டாக் செயலியின் முடக்கம் தற்காலிகமானதாக இருந்தாலும் அமெரிக்க-சீன உறவு, அமெரிக்க உள்நாட்டு அரசியல், பொருளியல் மற்றும் கலாசார ரீதியாக அச்செயலியைச் சார்ந்திருக்கும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் மீது அது பரந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பிரதான சமூக ஊடகத் தளம் ஒன்றுக்கு அமெரிக்கா இதுவரை தடை விதித்ததில்லை. அமெரிக்க நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், சீனாவுக்குச் சொந்தமான பிற செயலிகளைத் தடை செய்ய அல்லது விற்க எதிர்வரும் டிரம்ப் நிர்வாகத்திற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கிறது.

என்பிசி செய்தி நிறுவனத்திற்கு சனிக்கிழமை (ஜனவரி 18) டிரம்ப் அளித்த பேட்டியில், “90 நாள் அவகாசம் என்பது அநேகமாக வழங்கப்படும், ஏனெனில் அது பொருத்தமானதே,” எனக் கூறியிருந்தார்.

டிக்டாக்கின் செயல்பாடு குறித்து நடவடிக்கை எடுப்பது, எதிர்வரும் டிரம்ப் நிர்வாகத்தின் கையில் இருப்பதாக வெள்ளை மாளிகை சனிக்கிழமை சொன்னது.

“டிரம்ப் நிர்வாகம் திங்கட்கிழமை பதவியேற்பதற்கு முன்பு டிக்டாக் அல்லது பிற நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதற்கான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை,” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேரின் ஜீன் பியர் வெளியிட்ட அறிக்கை கூறியது.

வெள்ளை மாளிகையின் இந்த அறிக்கைக்கு டிக்டாக் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

அமெரிக்கா நியாயமற்ற அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி டிக்டாக்கை ஒடுக்குவதாக வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தது.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவும் டிக்டாக் செயலியைத் தடை செய்தது. பயனீட்டாளர்களின் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்தது.

குறிப்புச் சொற்கள்