கோலாலம்பூர்: மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் பதவி விலக முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 10) தெரிவித்தார்.
முன்னதாக, போக்குவரத்து அமைச்சு ஊழியர்களுடன் புதன்கிழமை (நவம்பர் 11) நடைபெறவுள்ள நிகழ்ச்சியானது தமது இறுதி நிகழ்வாகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் என்று அமைச்சர் லோக் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தமக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் நிபந்தனையுடனான பொது மன்னிப்பு வழங்கப்பட்டதற்கு ஜனநாயக செயல் கட்சி எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 6ஆம் தேதியன்று பதவி விலகும் எண்ணத்தை அமைச்சர் லோக் அறிவித்திருந்தார். நஜிப் தமது இல்லத்தை அடைந்தவுடன் தமது பதவி விலகல் நடைமுறைக்கு வரும் என்றும் தமது பதவி விலகலை அதிகாரபூர்வமாக்க பிரதமர் அன்வாரிடம் கூடுதல் கடிதம் ஒன்றைச் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, அமைச்சரவையில் இரண்டு பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று ‘உத்துசான் மலேசியா’ செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் லோக்கின் பதவி விலகலைத் தொடர்ந்து காலியாகும் போக்குவரத்து அமைச்சர் பொறுப்பு மற்றும் செனட்டராக மூன்று ஆண்டுகாலப் பதவிக்காலம் டிசம்பர் 11ஆம் தேதியன்று முடிவடையவுள்ள அமீர் ஹம்சா அசிசான் வகித்து வரும் இரண்டாம் நிதி அமைச்சர் பொறுப்பு ஆகியவை அந்த இரு பொறுப்புகளாகும்.
அமீர் ஹம்சா தமது பொறுப்பிலேயே நீடிக்க வாய்ப்புள்ளது. எனினும், அவர் மீண்டும் செனட்டராக நியமிக்கப்பட்டுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிறகே தமது அமைச்சரவைப் பணிகளைத் தொடர முடியும்.
அமைச்சரவையில் ஒட்டுமொத்தமாகப் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படுவதற்குப் பதிலாக, இந்த இரண்டு பொறுப்புகளுக்கு மட்டுமே மாற்றங்கள் வரையறுக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த நாளிதழ் அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதியன்று மலேசிய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.
