கோலாலம்பூர்: திமோர்-லெஸ்டே ஆசியானின் 11வது உறுப்பு நாடாக இணைய உள்ளது.
கோலாலம்பூரில் இவ்வாண்டின் பிற்பாதியில் நடைபெற இருக்கும் அடுத்த ஆசியான் கூட்டத்தில் அதற்கான முழு உறுப்பினர் தகுதியும் வழங்கப்படும்.
இதனை செவ்வாய்க்கிழமை (மே 27) மாலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.
இவ்வாண்டின் ஆசியான் அமைப்புக்குத் தலைமை ஏற்கும் நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவர் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“ஆசியான் வட்டாரக் குழுவில் திமோர்-லெஸ்டே முழு உறுப்பினராக இணையும். வரும் அக்டோபர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ள அடுத்த ஆசியான் கூட்டத்தில் அது நிகழும்.
“பொருளியல் அம்சத்தில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நிபந்தனைகளை திமோர்-லெஸ்டே நிறைவேற்ற வேண்டி உள்ளதால், அது முழுமையான உறுப்பு நாடு என்பதற்கான அங்கீகாரம் அக்டோபரில் வழங்கப்படும்,,” என்றார் திரு அன்வார்.
ஆசியாவின் ஆக இளமையான ஜனநாயக நாடான திமோர்-லெஸ்டே கடந்த 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மன்றத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆசியானில் அங்கம் வகிக்க அது ஆர்வம் காட்டியது. இருந்தபோதிலும், 2011ஆம் ஆண்டுதான் ஆசியானில் இணைவதற்கான விண்ணப்பத்தை திமோர்-லெஸ்டே அளித்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2022ஆம் ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின்போது, ஆசியானின் 11வத உறுப்பு நாடாக திமோர்-லெஸ்டே கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பார்வையாளர் நாடு என்னும் அந்தஸ்து அப்போது அதற்கு வழங்கப்பட்டது.
திமோர்-லெஸ்டே என்றால் கிழக்கு திமோர் என்று பொருள்.
வளங்கள் நிறைந்த அந்நாடு இந்தோனீசியாவின் தீவுக்கூட்டத்தின் தூரக் கிழக்கு முனையில், திமோர் தீவின் கிழக்கு வட்டாரத்தில் அமைந்துள்ளது. அதன் மேற்கு வட்டாரம் இந்தோனீசியாவுக்குச் சொந்தம்.
திமோர்-லெஸ்டேயின் தற்போதைய மக்கள்தொகை 1.5 மில்லியன்.
சிங்கப்பூர் ஆதரவு வழங்கும்: பிரதமர் வோங்
திமோர்-லெஸ்டே ஆசியானில் இணைவது குறித்து கருத்துத் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், அது உறுப்பு நாடாவதற்கான நடைமுறையை ஆதரிப்பதில் சிங்கப்பூர் தனது பங்கைச் செய்யும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “ஆசியான் தலைவர்களால் 2022ஆம் ஆண்டு கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திமோர்-லெஸ்டே, அது உறுப்பு நாடாக ஆவதற்கான வழிமுறை அப்போது வகுக்கப்பட்டது.
வழிமுறைகளைப் பின்பற்றுவதில் திமோர்-லெஸ்டே நல்ல முன்னேற்றம் கண்டபோதிலும், இன்னும் சில அம்சங்கள் பேசித் தீர்க்கப்பட வேண்டி உள்ளன. சில பொருளியல் உடன்பாடுகள் தொடர்பாகவும் பேச்சு நடத்தப்பட வேண்டி உள்ளது.
தற்போது நடைபெற்ற கூட்டத்தில், நிலுவையில் உள்ள அம்சங்களை விரைந்து முடிக்கவும் அது உறுப்பு நாடாக முழு ஆதரவு வழங்கவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர்,” என்றார்.