கோலாலம்பூர்: ஆசியானின் உறுப்பிய நாடாக அதிகாரபூர்வமாகத் திகழும் நிலையைத் திமோர் லெஸ்டே நெருங்கியுள்ளது.
ஆசியானில் சேர திமோர் லெஸ்டே ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் செய்திருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை (அக்டோபர் 25) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், திமோர் லெஸ்டேயை ஆசியான் அமைப்பில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளும் அதிகாரபூர்வ பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமோர் லெஸ்டேயை ஆசியானின் அதிகாரபூர்வ உறுப்பினராகச் சேர்க்க மேற்கொள்ளப்படும் பணிகளில் ஒன்றாக ஆவணம் ஒன்றில் கையெழுத்திடப்படும்.
தென்கிழக்காசியாவை அணுவாயுதம் மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இல்லாத வட்டாரமாக வைத்திருக்கக் கடப்பாடு கொள்ளும் வகையில் திமோர் லெஸ்ட் ஆவணத்தில் கையெழுத்திடும்.
ஆசியானில் அதிகாரபூர்வ உறுப்பினராக ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 26) திமோர் லெஸ்டே அறிவிக்கப்படும்.

