யங்கூன்: மியன்மாரின் ஜனநாயகக் கொள்கையாளரும் திருவாட்டி ஆங் சான் சூச்சி அம்மையாரின் தேசிய ஜனநாயக லீக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவருமான திரு டின் ஊ காலமானார்.
அவருக்கு வயது 97.
அவர் திருவாட்டி சூச்சிக்கு மிக நெருக்கமானவர்.
திரு டின் ஊ, யங்கூனில் உள்ள மருத்துவமனையில் ஜூன் 1ஆம் தேதி காலை காலமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் அங்கு சுகாதாரப் பிரச்சினைகளுக்காக சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.
திரு டின் ஊ, 1988ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பத்தாண்டுகளுக்கும் மேல் ராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
அதன் பிறகு, 2003ஆம் ஆண்டில், ராணுவத்திற்கு ஆதரவான கும்பல் ஒன்று, அவர்களின் வாகனங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் திருவாட்டி சூச்சியுடன் கைதுசெய்யப்பட்டார். அதில் பலர் மாண்டனர்.
2017ஆம் ஆண்டில், திரு டின் ஊ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அண்மை ஆண்டுகளில் முதுமை, மோசமான உடல்நிலை காரணமாக அவர் அரசியலிலிருந்து விலகியிருந்தார்.

