தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவின் ஷின்ஜூகு பகுதியில் ஆடவர் ஒருவர் கத்தியைக் கொண்டு ஒரு பெண்ணைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து அவ்வட்டாரக் காவல்துறை அதிகாரிகளுக்குச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) காலை 9.50 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சாலையில் 20 வயதுகளில் உள்ள ஒரு பெண் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டனர். அவரின் தலை, கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
அதன்பின்னர் அவரை அதிகாரிகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அப்பெண் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
கொலை தொடர்பாக 40 வயதுகளில் உள்ள ஆடவர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடவர் கொலை நடந்த இடத்தில் இருந்தார். அங்கு ஒரு கத்தியும் கைப்பற்றப்பட்டது.
கொலை செய்யப்பட்ட பெண் சாலையில் சமூக ஊடகத்தின் வழி நேரலை செய்துகொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்.
மாண்ட பெண்ணுக்கும் கைது செய்யப்பட்ட ஆடவருக்கும் இடையே முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஆடவர் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணை தொடர்கிறது.
தொடர்புடைய செய்திகள்
கொலை நடந்த சாலை பரபரப்பாக இருக்கும் இடமாகும். அங்குப் பல வீடுகள், கடைகள் உள்ளன.

