ஜப்பானில் கொட்டித் தீர்த்த மழை; 9 பேர் உயிரிழப்பு, வெள்ளத்தில் மிதக்கும் வாகனங்கள்

ஜப்பானில் கொட்டித் தீர்த்த மழை; 9 பேர் உயிரிழப்பு, வெள்ளத்தில் மிதக்கும் வாகனங்கள்

2 mins read
288ca1b2-3096-4d15-b323-c298ad0a78e0
சிபா வட்டாரத்தில் பெய்த பெருமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 7-லெவன் கடை. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

தோக்கியோ: ஜப்பானின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் பெய்த வரலாறு காணாத பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டனர்.

ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு தொடங்கிய இடி மழையை அடுத்து, சிபா வட்டாரத்திற்கு முதன்முறையாக ஆக உயரிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரத்தில் 30 சென்டிமீட்டர் மழை பதிவானது.

அதற்கு மறுநாள் காலை நிலவரப்படி, சிபாவில் ஆகஸ்ட் மாதச் சராசரியைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான மழை பதிவானதாக ஜப்பானிய நில அமைச்சு குறிப்பிட்டது.

ஆகஸ்ட் 15 நிலவரப்படி, வெள்ளத்தில் மூழ்கிய கார்களுக்குள் மாட்டிக்கொண்டும் வெள்ளத்தில் சிக்கியும் எட்டுப் பேர் உயிரிழந்ததாகச் சிபா பேரிடர் நிர்வாக அலுவலகம் தெரிவித்தது.

மழையால் 70க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன; 1,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

இதனிடையே, சிபாவில் வெள்ளத்தில் சிக்கிச் செயல்பட முடியாமல் போன 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வீதியோரங்களில் கைவிடப்பட்டுள்ளன. விடுமுறைக் காலம் என்பதால் பழுதுபார்ப்புப் பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இழுவை வாகனங்கள் மூலம் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மட்டும் அத்தகைய 2,000 கோரிக்கைகள் வந்துள்ளன. சாலைகளில் கைவிடப்பட்ட வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் பல வாகன விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

இதனிடையே, நாடு முழுவதும் இருந்து கூடுதல் இழுவை வாகனங்களை அனுப்ப அரசாங்கத்தை வலியுறுத்தப்போவதாக சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தக்கயுக்கி கோபயாஷி தெரிவித்துள்ளார்.

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இத்தகைய தீவிரமான வானிலைக்குக் காரணம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்