தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடிநுழைவுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை: டிரம்ப் சூளுரை

2 mins read
2069c600-4c6e-4dbc-bf2e-6041d7a451f0
ஜனவரி 19ஆம் தேதியன்று புதிய அமெரிக்க அதிபராகப் பதவியேற்பதற்கு முந்தைய நாள் டோனல்ட் டிரம்ப் கூட்டிய பேரணியில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க்கை வரவேற்கும் காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: புதிய அமெரிக்க அதிபராகத் திங்கட்கிழமை (ஜனவரி 20) பதவியேற்ற டோனல்ட் டிரம்ப், தமது முதல் நாள் பதவிக்காலத்திலேயே குடிநுழைவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக பல்லாயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பரித்த தமது ஆதரவாளர்கள் மத்தியில் சூளுரைத்தார்.

வாஷிங்டனில் அரங்கம் நிறைந்த பேரணி, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19ஆம் தேதி) தமது அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய உறுதிமொழியான குடிநுழைவுக் கட்டுப்பாட்டை குறிப்பிட்டு திரு டிரம்ப் உரையாற்றினார்.

“நாளை சூரியன் மறையும் முன் நமது நாட்டின் மீதான படையெடுப்பு முடிவுக்கு வரவேண்டும்,” என ‘அமெரிக்காவை மீண்டும் பெருமைமிக்க நாடாக மாற்ற வேண்டும்’ என்ற முழக்கக் கருப்பொருளுடன் கூடிய பேரணியில் திரு டிரம்ப் கூறினார்.

திரு டிரம்ப் தமது தேர்தல் பிரசாரத்தில் கூறியபடி, அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடு கடத்தும் நடவடிக்கையை தாம் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தார். அதன்படி, பல மில்லியன்கணக்கான குடியேறிகள் அகற்றப்படுவர் என அவர் விளக்கினார்.

எனினும், அதுபோன்ற நடவடிக்கை அநேகமாக பல ஆண்டுகள் பிடிக்கும், பெருத்த செலவை ஏற்படுத்தும் என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.

வாஷிங்டனில் நடைபெற்ற அந்தப் பேரணியில் திரு டிரம்ப் ஆற்றிய உரை அவர் முதல் முதலாக அதிபர் பதவிப் போட்டியில் 2016ஆம் ஆண்டு இறங்கியதிலிருந்து ஆற்றிவரும் உரையை ஒத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்களின் செவி குளிர திரு டிரம்ப் தற்பெருமை அடித்துக்கொண்டு, பல வாக்குறுதிகளை அளித்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

“அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது மிகப் பெரிய இயக்கம். எழுபத்தைந்து நாள்களுக்கு முன் இந்த சகாப்தத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய அரசியல் வெற்றியை இந்த நாடு கண்டது,” என்று முழங்கிய திரு டிரம்ப், “நாளை தொடங்கி, வரலாற்றில் இதுவரை காணாத வேகம், வலுவுடன் தாம் நாட்டை எதிர்நோக்கும் அனைத்து நெருக்கடிளையும் முடிவுக்குக்குக் கொண்டுவரும் வகையில் செயல்படுவேன்,” என்று முழங்கினார்.

குறிப்புச் சொற்கள்