வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடும் டோனல்ட் டிரம்ப்புக்கும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிசுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) தேர்தல் நாளாகும்.
சில இடங்களில் முன்கூட்டியே வாக்களிப்பு நடந்து முடிந்துவிட்ட நிலையில், அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் அவற்றின் நிலைப்பாட்டில் காலங்காலமாக அசைக்க முடியாத உறுதியுடன் இருந்து வருகின்றன.
சில மாநிலங்கள் குடியரசுக் கட்சியை ஆதரிக்கின்றன. சில மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், இம்முறை ஏழு மாநிலங்கள் மட்டும் எந்தப் பக்கம் சாயும் என்று முன்னுரைக்க முடியவில்லை.
கடுமையான போட்டி நிலவும் நிலையில், இந்த ஏழு மாநிலங்கள் எடுக்கும் முடிவு வெற்றியாளரைக் தீர்மானிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின், அரிசோனா, ஜார்ஜியா, நெவேடா, வடகரோலைனா ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கு வாக்களிப்பர் என்று தெரியவில்லை என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாநிலங்கள் பல ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சியின் அரண்களாக இருந்து வந்துள்ளன. ஆனால், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அம்மாநிலங்களை டிரம்ப் நூலிழையில் கைப்பற்றினார். அத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஹில்லரி கிளின்டன் தோல்வி அடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிச்சிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா ஆகிய மாநிலங்கள் மீண்டும் ஜனநாயகக் கட்சி பக்கம் சாய்ந்தன.
அதுமட்டுமல்லாது, காலங்காலமாகக் குடியரசுக் கட்சியின் கொடியை உயரப் பிடித்த அரிசோனா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்கள் ஜனநாயகக் கட்சி வசம் சென்றன.
இதற்கிடையே, அமெரிக்காவின் அடுத்த அதிபருக்கு வாக்களிக்கும் மாநிலப் பிரதிநிதிகளை அமெரிக்க வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பிரதிநிதிகள் குடியரசுக் கட்சி அல்லது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பர். இவ்வாறு 538 பிரதிநிதிகளுக்கான வாக்களிப்பு நடைபெறும்.
குறைந்தது 270 இடங்களைக் கைப்பற்றும் கட்சியின் வேட்பாளர் அமெரிக்க அதிபராக அறிவிக்கப்படுவார்.
மற்ற மாநிலங்களைவிட பென்சில்வேனியாவில் ஆக அதிகமாக 19 பிரதிநிதிகளுக்கான வாக்களிப்பு நடைபெறுகிறது.
தேர்தலின் இறுதிக்கட்டம் நெருங்குகையில் மிச்சிகனில் பிரசாரம் செய்த கமலா ஹாரிஸ் தமக்கு வாக்களிக்கும்படி கிறிஸ்துவ சமயத்தினரையும் அமெரிக்காவைச் சேர்ந்த அரபு இனத்தவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, பென்சில்வேனியாவில் டிரம்ப் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.