கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலக் கடற்பகுதியில் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் மூழ்கி மாண்டார்.
இச்சம்பவம் திங்கட்கிழமை (மே 19) காலை சாபாவின் செம்பூர்ணா பகுதியைச் சேர்ந்த சிப்பாடான் தீவின் கடற்பகுதியில் நிகழ்ந்தது
அந்த 37 வயது ஆடவர் தமது மனைவியுடனும் மற்ற சிலருடனும் கடலில் முக்குளித்துக்கொண்டிருந்தபோது அசம்பாவிதம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
சம்பவத்தின்போது அவர்களுடன் முக்குளிப்பு வழிகாட்டிகளும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சீன சுற்றுப்பயணியின் மரணம் குறித்து மாலை 6.45 மணிக்குத் தகவல் கிடைத்ததாக செம்பூர்ணா காவல்துறைத் தலைவர் முகம்மது சப்ரி ஸைனுல் தெரிவித்தார்.
ஐந்து முக்குளிப்பு வழிகாட்டிகளுடன் எட்டு பேர் முக்குளித்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
முக்குளித்துக்கொண்டிருந்த சுற்றுப்பயணிகள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஆடவர் தங்கள் அனுமதி இன்றி படகிலிருந்து கடலில் குதித்ததாகவும் அதன் பிறகு அவர் கடலில் மூழ்கியதாகவும் முக்குளிப்பு வழிகாட்டிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இதைப் பார்த்த படகோட்டி தங்களிடம் அதுகுறித்து தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கடலில் மூழ்கியவரைத் தேடி மீட்கும் பணி உடனடியாக முடுக்கிவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
25 மீட்டர் ஆழத்தில் அந்த ஆடவரைக் கண்டெடுத்ததாக முக்குளிப்பு வழிகாட்டிகள் கூறினார்.
கடலில் மேற்பரப்புக்கு அவர் உடனடியாகக் கொண்டு வரப்பட்டு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
“அந்த ஆடவர் சுயநினைவின்றிக் கிடந்தார். அவர் மூச்சுவிடவில்லை. அதுமட்டுமின்றி வாந்தியும் எடுத்தார்,” என்றார் திரு முகம்மது சப்ரி.
பாதிக்கப்பட்ட ஆடவர் செம்பூர்ணா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பிறகு தாவாவ் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.


