கனடாவுடன் வர்த்தகப் பேச்சு: மீண்டும் தொடங்குவதை நிராகரித்த டிரம்ப்

கனடாவுடன் வர்த்தகப் பேச்சு: மீண்டும் தொடங்குவதை நிராகரித்த டிரம்ப்

படம்: ஏஎஃப்பி

01 Nov 2025 - 11:40 am

2 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கனடாவுடன் வர்த்தகப் பேச்சுகளை மீண்டும் தொடங்குவதை நிராகரித்துள்ளார். அதிபரின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) செய்தியாளர்களிடம் பேசியபோது திரு டிரம்ப் அவ்வாறு கூறினார். தீர்வைகளுக்கு எதிரான விளம்பரத்தின் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் சர்ச்சை நிலவுகிறது.

கனடியப் பிரதமர் மார்க் கார்னி பற்றிக் குறிப்பிட்ட திரு டிரம்ப், “அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்கள் செய்வது தவறு,” என்றார்.

திரு கார்னி, விளம்பரத்தில் ஏற்பட்ட தவற்றுக்கு ஏற்கெனவே மன்னிப்புக் கேட்டுவிட்டார்.

கனடாவின் ஒன்ட்டாரியோ மாநிலம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்தைத் தொடர்ந்து திரு டிரம்ப் அந்நாட்டுடனான வர்த்தகப் பேச்சை நிறுத்தும்படி உத்தரவிட்டார். அந்நாட்டுக்கான தீர்வையை மேலும் 10 விழுக்காடு கூட்டப்போவதாகவும் அவர் சொன்னார்.

ஒன்ட்டாரியோ அரசாங்கம் வெளியிட்ட விளம்பரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரோனல்ட் ரீகன் கூறிய கருத்துகள் இடம்பெற்றிருந்தன. வெளிநாட்டுப் பொருள்கள் மீது வரி விதித்தால், வர்த்தகப் போர்கள் மூளக்கூடும் என்றும் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தடையற்ற சந்தைக்கும் தடையற்ற வர்த்தகத்துக்கும் பெயர் பெற்றவர் காலஞ்சென்ற திரு ரீகன்.

திரு கார்னியுடன் தமக்கு நல்ல உறவு இருப்பதாகவும் தென்கொரியாவில் ஏபெக் மாநாட்டுக்கு இடையே ஆக்ககரமான விவாதத்தில் இருவரும் ஈடுபட்டதாகவும் அமெரிக்க அதிபர் சொன்னார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில், வா‌ஷிங்டனுடன் வர்த்தகப் பேச்சைத் தொடங்கக் கனடா தயாராய் இருப்பதாகத் திரு கார்னி மீண்டும் கூறியிருந்தார்.

திரு டிரம்ப் மீண்டும் அதிபர் பதவியேற்றதும் நெடுங்கால நட்பு நாடுகளான அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் சிறிது சலசலப்புக் காணப்படுகிறது.

அமெரிக்காவின் இரண்டாவது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளித்துவ நாடு, கனடா. உலோகம், அலுமினியம் ஆகியவற்றை அது அதிக அளவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்கிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காகனடாஉறவுவிளம்பரம்மன்னிப்புடோனல்ட் டிரம்ப்