எண்ணெய் வர்த்தகர் ஒருவர் கப்பல் தரகர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டபின், சொந்த வர்த்தக நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அவருக்கு எண்ணெய் விற்பனை செய்பவராக மாறினார்.
இதற்காக அவர் அந்தத் தரகரின் வாடிக்கையாளர்களுக்காக எண்ணெய்ப் பொருள்களை வாங்கி தரகரின் வாடிக்கையாளர்களுக்கு அவற்றை விற்பனை செய்வார். அதில் கிடைக்கும் லாபத்தை அவரும் அந்தத் தரகரும் பங்குபோட்டுக் கொள்வர்.
ஜஸ்டின் லாவ் எங் யிவாவ் என்ற அந்த எண்ணெய் வர்த்தகர் பின்னர் கிவெக் கீ செங் என்ற அந்தத் தரகரின் வாடிக்கையாளர் ஒருவருக்கு கேசோய்ல் என்ற ஒருவித வர்த்தக ரீதியிலான எண்ணெய்யை வாங்கி விற்க முன்வந்தார்.
கேசோய்ல் என்ற அந்த வகையான எண்ணெய்யை வடகொரியாவுக்கு விற்க தடையுள்ளதை அவ்விருவரும் அறிந்திருந்தனர்.
இதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை (மார்ச் 21ஆம் தேதி) ஐக்கிய நாடுகள் தடைகளுக்கு எதிராக செயல்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை லாவ் ஒப்புக்கொண்டார். அவருக்கு 12 மாத, மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடைய நிறுவனத்துக்கு எதிராக $280,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
குவெக்கிற்கு எதிரான குற்றச்சாட்டில் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் ஏப்ரல் 8ஆம் தேதி இடம்பெற உள்ளது.

