கம்போடியத் தலைநகரில் பாரம்பரிய நீர் விழா ரத்து

கம்போடியத் தலைநகரில் பாரம்பரிய நீர் விழா ரத்து

2 mins read
bec4aa11-26de-4a10-998f-8a7fd53627da
தாய்லாந்து உடனான எல்லைப் பிரச்சினை காரணமாக 21,425 கம்போடியர்கள் இன்னும் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நோம்பென்: கம்போடியத் தலைநகர் நோம்பெனில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த பாரம்பரிய நீர் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாய்லாந்துடனான எல்லைப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டும் பூசல் காரணமாக வாழ்விடங்களை இழந்து தவிப்போரை எண்ணியும் இந்த முடிவைக் கம்போடிய அரசாங்கம் எடுத்துள்ளது.

நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் கம்போடிய அரச மாளிகைக்கு முன் உள்ள தொன்லே சாப் ஆற்றங்கரையில் நீர் விழா நடைபெறவிருந்தது. அது இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட் ஜூன் 25ஆம் தேதி கையெழுத்திட்ட அரசாங்கச் சுற்றறிக்கை மூலம் இந்த முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வட்டார, மாநில அளவிலான கொண்டாட்டங்கள் வழக்கம்போல் தொடரலாம் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகரில் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும் எப்போதும்போல் வழங்கப்படும் மூன்று நாள் பொது விடுமுறை வழக்கம்போல் தொடரும்.

ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, எல்லைப் பிரச்சினை காரணமாக 21,425 கம்போடியர்கள் இன்னும் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

“பிரே சான், சௌக் சே, போயங் திராகுவான் உள்ளிட்ட கிராமங்களை தாய்லாந்து ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. பூசலின் போது அங்கு வீசப்பட்டிருந்த வெடிபொருள்கள் இன்னும் அகற்றப்படவில்லை. அதனால் மக்களால் அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியவில்லை,” என்று கம்போடியாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தாய்லாந்திலிருந்து தாயகம் திரும்பிய கம்போடியத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு தொழிலாளர் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுக்கும் பிரதமர் ஹுன் மானெட் உத்தரவிட்டுள்ளார்.

மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைக் கண்காணித்து, உள்ளூர் பொருளியலை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடருமாறு பணிக் குழுக்களை ஹுன் மானெட் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்