வாஷிங்டன்/லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின்போது, இரண்டு அதிநவீனப் போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிர்ஷ்டவசமாக, விமானங்களில் இருந்த மாலுமிகள் அனைவரும் வான்குடைகள் மூலம் குதித்து உயிர் தப்பினர்.
ஐடஹோ மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 18) நடைபெற்ற ‘கன்ஃபைட்டர் ஸ்கைஸ்’ விமானக் கண்காட்சியின்போது அந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்தது.
இதுகுறித்து அந்த விமானக் கண்காட்சி அமைப்பின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்திற்கு வடமேற்கே இரண்டு மைல் தொலைவில் விமான விபத்து ஒன்று நேரிட்டுள்ளது.
“மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இரு ‘இஏ-18’ வகை போர் விமானங்களும் நடுவானில் மோதிக்கொண்ட வேளையில், அதிலிருந்த நான்கு பணியாளர்களும் சாதுரியமாக விமானத்தில் இருந்து வெளியேறி பாதுகாப்பாகத் தரை இறங்கியதாக உள்ளூர் செய்தி நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
விமானங்கள் இரண்டும் மோதி, காற்றில் சுழன்று தரையில் விழுந்து நொறுங்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அவை தரையில் விழுந்ததும் பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறி, வானுயரத்திற்குக் கரும்புகை எழும்பியது.
தொடர்புடைய செய்திகள்
அதே நேரத்தில், நான்கு வான்குடைகள் காற்றில் மிதந்து கீழே இறங்கும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.
கண்காட்சி ரத்து; விமானப்படைத் தளம் மூடல்
அந்த விபத்தையடுத்து, விமானக் கண்காட்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டதுடன், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் முதற்கட்ட விசாரணையைத் தொடங்குவதற்காகவும் மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளம் தற்காலிகமாக மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக என்பிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

