மாட்ரிட்: ஸ்பெயினில் புதன்கிழமை (அக்டோபர் 28) இரண்டு அதிவேக ரயில்கள் ஒன்றோடொன்று மோதியதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாட்ரிட் நகரை தென் அண்டலூசியா வட்டாரத்துடன் இணைக்கும் வழித்தடத்தில், ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் நிகழ்ந்த இரண்டாவது ஆக மோசமான விபத்து இது.
‘ரென்ஃபே’ ரயில்வே நிறுவனத்தால் இயக்கப்படும் ஒரு ரயிலும் ‘இரியோ’ அதிவேக ரயில் நிறுவனத்தால் இயக்கப்படும் மற்றொரு ரயிலும் உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை மாலை 4 மணி) மோதிக்கொண்டன.
இதில் இரியோ ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக காஸ்டிலா-லா மாஞ்சா வட்டாரப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
காஸ்டிலா-லா மாஞ்சா தொலைக்காட்சியில் தடம் புரண்ட ரயிலின் படங்கள் காட்டப்பட்டன.
ரயிலில் ஒரு பெட்டி தண்டவாளத்தின் உயர்த்தப்பட்ட பகுதியில் நிற்பதும் வளைந்த உலோகங்கள், உடைந்த பலகைகள், சிதைந்த பாகங்கள் முதலியவை ரயில் பாதைக்குக் கீழே உள்ள சரிவுப் பகுதியில் சிதறிக் கிடப்பதும் அதில் காட்டப்பட்டன.
அந்த ரயில்களில் ஒன்றின் கடைசிப் பெட்டியில் பயணம் செய்த மிகுவல் என்ற பயணி விபத்து பற்றி விவரித்தார்.
“ரயில் தடம் புரளப் போவது போன்ற பயங்கரமான சத்தத்தைக் கேட்டோம். 10 நொடிகள் நீடித்த மிகப் பெரிய அதிர்வையும் நாங்கள் உணர்ந்தோம்.
‘வலப் பக்கச் சன்னல் வழியாகப் பார்த்தபோது, விபத்துக்குள்ளான மற்றொரு ரயில் சிதைந்து கிடப்பதை எங்களால் காணமுடிந்தது,” என்று அவர் கூறினார்.
