தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆட்சி மாற்றம் சுமுகமாக இருக்கும்: பைடன்

1 mins read
வெள்ளை மாளிகையில் உரையாற்றினார்
f3df7998-f2ea-4ff8-b5f6-6dc4d2b0b14a
அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், ஆட்சி மாற்றம் ஆகியவை குறித்து நவம்பர் 7ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்யவிருப்பதாகக் கூறியுள்ளார்.

அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் திரு பைடனின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியுற்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், நவம்பர் 7ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் உரையாற்றினார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றபோது திரு டிரம்ப் அந்த முடிவுகளை ஏற்க மறுத்தார். அத்துடன், அமெரிக்கத் தேர்தல் நடைமுறையின் நேர்மையையும் கேள்விக்குறியாக்கினார் என்பதைத் திரு பைடன் சுட்டினார்.

அண்மைய தேர்தல் முடிவுகள் அத்தகைய ஐயங்களுக்கு விடையளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“நீங்கள் யாருக்கு வாக்களித்திருந்தாலும் எதிர்த்தரப்பினரை எதிரிகளாகக் கருதாமல் சக அமெரிக்கர்களாகக் கருதுங்கள். அரசியல் சூழலில் சினத்தைத் தணியுங்கள். இதைச் செய்ய நம்மால் முடியும் என்று நம்புகிறேன்,” என்றார் திரு பைடன்.

திரு டிரம்ப்பைத் தொலைபேசியில் அழைத்துத் தாம் வாழ்த்துக் கூறியதாகவும் ஆட்சி மாற்றம் அமைதியாகவும் சீராகவும் நடைபெறும் என்பதை உறுதி செய்ததாகவும் அவர் சொன்னார்.

திரு டிரம்ப் பதவியேற்றபின் தமது கொள்கைகள் பலவற்றையும் புறக்கணிப்பார் என்றபோதும் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று தமது ஆதரவாளர்களிடம் திரு பைடன் வலியுறுத்தினார்.

“வரும் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழும்,” என்றார் அவர். திரு பைடன் பதவியேற்றுக்கொண்டபோது, திரு டிரம்ப் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்து விட்டார்.

குறிப்புச் சொற்கள்