வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 12 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தடைசெய்யும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
தேசியப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக திரு டிரம்ப் கூறினார்.
அதன்படி ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், காங்கோ, இக்குவட்டோரியல் கினி, எரித்ரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியாது. மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுவேலா ஆகிய நாடுகளிலிருந்து செல்வோருக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் இருக்கும்.
இந்தப் பயணத் தடை உத்தரவு குறித்து சிபிஎஸ் நியூஸ் ஊடகம் முதலில் செய்தி வெளியிட்டது.
“நமக்குத் தீங்கு இழைக்க நினைப்போரை நமது நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம்,” என்று திரு டிரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு காணொளியில் குறிப்பிட்டுள்ளார். தடை விதிக்கப்பட்ட நாடுகள் இடம்பெறும் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் கூடுதல் நாடுகள் அதில் சேர்க்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பயணத் தடை உத்தரவு திங்கட்கிழமை (ஜூன் 9) உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.01 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 12.01 மணி) நடைமுறைக்கு வரும்.
பெரிய அளவில் பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுப்பவை, விசா பாதுகாப்புக்கு ஒத்துழைக்காதவை மற்றும் பயணிகளின் அடையாளங்களைச் சரிபார்க்கப் போதுமான ஆற்றல் இல்லாதவை, குற்றவாளிகளின் பின்னணி குறித்த தகவல்களை சரிவர சேகரித்துவைக்காதவை, விசா நிறைவடைந்த பிறகும் தொடர்ந்து அமெரிக்காவில் இருப்போரைக் கொண்டிருப்பவை ஆகிய நாடுகள் ஆகக் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்நோக்கும் நாடுகள் ஆகும் என்று திரு டிரம்ப் விவரித்தார்.
“பாதுகாப்பான, நம்பகமான முறையில் சோதனையிட முடியாதோரைக் கொண்ட எந்த நாட்டிலிருந்தும் பயணிளிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடியாது,” என்று திரு டிரம்ப் சொன்னார். மேலும், அமெரிக்காவுக்குள் நுழைந்து அங்குள்ள மக்களுக்குத் தீங்கு இழைக்கும் வெளிநாட்டவரிடமிருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பதாகத் தாம் அளித்த வாக்கை திரு டிரம்ப் நிறைவேற்றுகிறார் என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளரான திருவாட்டி அபிகெய்ல் ஜாக்சன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.