தென்கொரிய அதிபர் யூனுக்குப் பயணத் தடை

2 mins read
c61b19af-236d-4c86-ac9b-3e0e773ca949
அதிபர் யூனுக்கு எதிர்ப்பு வலுத்தாலும் அவருக்கு ஆதரவாக பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: இபிஏ

சோல்: தென்கொரியாவின் ஊழல் விசாரணைப் பிரிவின் தலைமை வழக்கறிஞர், அதிபர் யூன் சுக் இயோலுக்கு பயணத் தடை விதித்துள்ளார்.

கடந்த வாரம் ராணுவச் சட்டம் கொண்டுவர முயற்சி செய்ததற்காக திரு யூன் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் யூனுக்கும் அவரது மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில மணி நேரமே நீடித்த ராணுவச் சட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் யூன் பதவி விலக வேண்டும் என்பது அவர்களுடைய முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை அதிபர் யூன் மீது அரசியல் முறைகேட்டுக் குற்றம் சாட்டப்படும் முயற்சி தோல்வியடைந்தது.

இவ்வேளையில் ஆளும் மக்கள் சக்தி கட்சி, அதிபர் யூன் முறையாகப் பதவி விலகும் வரை தங்களுடைய கட்சித் தலைவரும் பிரதமரும் நாட்டை வழிநடத்துவார்கள் என்று அறிவித்தது.

சனிக்கிழமை பொதுமக்களிடையே பேசிய அக்கட்சியின் தலைவர் டோங்-யூன், பதவி விலகும் வரை உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களில் அதிபர் ஈடுபட மாட்டார் என்றார்.

இருப்பினும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவரான பார்க் சான்-டே, ஆளும் கட்சி முன்மொழிந்த திட்டத்தை ‘சட்டவிரோதமான, அரசியலமைப்பிற்கு எதிரானது, இரண்டாவது கிளர்ச்சி மற்றும் இரண்டாவது சதி’ என்று குறிப்பிட்டார்.

ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியான கிம் மின்-சியோக்கும் இதேபோல் திட்டத்தை விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே அதிபரின் அதிகாரங்களைக் கூட்டாக பிரதமரும் ஆளும் கட்சியும் நிர்வகிப்பார்கள் என்ற அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என்று கொரிய ஹெரால்ட் அறிக்கை தெரிவித்தது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் யூனுக்கு எதிராக பதவியிலிருந்து அகற்றும் வாக்கெடுப்பை நடத்தப் போவதாக எதிர்க்கட்சி சூளுரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்