சீனக் குடிமக்களுக்குப் பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன

சீனக் குடிமக்களுக்குப் பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன

2 mins read
4ec656ff-b13a-4112-b55b-26dabc752152
பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனக் குடிமக்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கடுமையாக்கியுள்ளது.

சீன அரசின் இந்த நடவடிக்கை, அந்நாட்டுக் குடிமக்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

வெளிநாடுகளில் இருக்கும்போது சீனாவின் தேசியப் பாதுகாப்புக்கோ நலன்களுக்கோ ‘பாதிப்பு’ ஏற்படுத்தியதாகக் கருதப்படும் குடிமக்கள், நாடு திரும்பியதும் மூன்று ஆண்டுகள் வரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படலாம்.

புதிய விதிகளின்படி, தொழில்நுட்ப இறக்குமதி ஏற்றுமதி விதிகளை மீறுபவர்களுக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படலாம்.

தேசிய இறையாண்மையையும் பாதுகாப்பையும் பேணவே புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியதாகச் சீன அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். சாதாரணக் குடிமக்களின் பயணங்களை இந்த விதிகள் கட்டுப்படுத்தவில்லை என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேவேளையில், அபாயகரமான இடங்கள், அசாதாரணப் பயண முறைகளைக் கொண்டோர்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த விதிகள் இயற்றப்பட்டுள்ளதாக சீன அரசின் ‘பியாவ்’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மக்கள் ஏமாற்றப்பட்டு வெளிநாடுகளுக்குச் செல்வது, சட்டவிரோதச் சூதாட்டம், இணைய மோசடிகளில் ஈடுபடுவது போன்ற விவகாரங்களுக்குத் தீர்வுகாணவே இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.

ஆயினும், வெளிநாடுகளில் சீனக் குடிமக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக சீன அரசின் அதிகாரத்தை புதிய விதிகள் தீவிரப்படுத்தும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.

வெளிநாடுகளில் சீன அரசை விமர்சிப்பதைத் தடுக்கவும் தனிமனிதர்களின் உரிமை சார்ந்த நடவடிக்கைகளைத் தண்டிக்கவும் கடப்பிதழ் வழங்க அரசாங்க அதிகாரிகள் மறுப்பதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தங்களுக்கு விதிக்கப்படும் பயணக் கட்டுப்பாடுகள் தெளிவற்றதாக இருப்பதாகச் சீனக் குடிமக்கள் சிலர் குறைகூறுகின்றனர். அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை, தாங்கள் பயணக் கட்டுப்பாட்டில் இருப்பதை மக்கள் அறிய முடிவதில்லை என்று கூறப்படுகிறது.

காரணங்களை எழுத்துவழியாக விளக்க வேண்டும் என்ற நிர்வாக உரிமச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்