சோல்: முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகளை ஏற்க மறுத்துவரும் நிலையில், திட்டமிட்டபடி டிசம்பர் 27 அன்று முன்னோட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கூறியது.
180 நாட்களுக்குள் திரு யூனின் பதவி நீக்கம் குறித்த இறுதி முடிவை நீதிமன்றம் வழங்க வேண்டும்.
திரு யூன் டிசம்பர் 20 அன்று கோரிக்கைகளை எழுத்துபூர்வமாகப் பெற்றதாகக் கருத ஆறு நீதிபதிகளும் முடிவு செய்துள்ளதாகக் அது கூறியது.
விசாரணை பதிவு குறித்த அறிவிப்பு, விசாரணை தேதிகள் குறித்த அறிவிப்பு, திரு யூன் தனது அறிக்கையைத் தயாரிக்கவும், ஆதாரங்களை வழங்கவும் வகைசெய்யும் நீதிமன்ற உத்தரவு ஆகிய மூன்று ஆவணங்கள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நீதிமன்றம் கூறியது. ஆவணங்களை டிசம்பர் 24ஆம் தேதிக்குள் திரு யூன் சமர்ப்பிக்க வேண்டும்.
திரு யூன் ஆவணங்களை பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும், நிர்ணயிக்கப்பட்டபடி முன்னோட்ட விசாரணை டிசம்பர் 27 அன்று இடம்பெறும் என்று நீதிமன்றம் கூறியது.
திரு யூன் அதிகாரிகளுக்கு இணங்காமல் விசாரணை நடைமுறைகளை இழுத்தடித்து வருகிறார் என்ற விமர்சனங்களை அவரது நம்பிக்கைக்குரிய வழக்கறிஞர் சியோக் டோங் ஹையியோன் நிராகரித்தார்.
திரு யூன் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் இன்னும் அதிபராகவே இருக்கிறார். விசாரணை அமைப்புகளுக்கு இணங்க வேண்டிய கடப்பாடு அவருக்கு இல்லை என்றும் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தன்னைத் தற்காக்க தனக்கு எதிரான எந்தவொரு விசாரணைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திரு யூன் நம்புவதாகவும் திரு சியோக் குறிப்பிட்டார்.
முன்னதாக, டிசம்பர் 3 ராணுவச் சட்ட அமலாக்க முயற்சியைத் தொடர்ந்து திரு யூனின் மீது சுமத்தப்பட்ட கிளர்ச்சி, அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகம், விசாரணைக்கு திரு யூன் முன்னிலையாக வேண்டும் என்ற கோரிக்கை தோல்வியடைந்ததாக அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, முக்கிய எதிர்க்கட்சியான கொரியா ஜனநாயகக் கட்சி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) இடைக்கால அதிபர் ஹான் டுக் சூவைப் பதவி நீக்கம் செய்யும் நடைமுறையை முன்னெடுக்கப் போவதாகக் கூறியுள்ளது.
முன்னாள் அதிபர் யூன் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்றது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை நிராகரித்தது, தற்போதைய பிரச்சினைகளில் நாடாளுமன்றம் “சமரசம்” செய்ய வேண்டும் என்று கோரியது ஆகியவற்றின் அடிப்படையில் அவர் மீது குற்றம் சுமத்தப்படும் என்று அக்கட்சி கூறியது.
ராணுவ ஆட்சியை அமல்படுத்த திரு யூன்னுக்கு திரு ஹான் உதவியதாக அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஆனால் டிசம்பர் 24 அன்று நடந்த திரு ஹானின் அமைச்சரவைக் கூட்டம், சிறப்புக் குழு மசோதா குறித்த ஆய்வை முற்றிலுமாகத் தவிர்த்தது.
மசோதா மற்றும் புதிய அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் “சமரச நடவடிக்கைகளுக்கு” தற்காலிக அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
“கிளர்ச்சியின் மீதான விசாரணையில் எப்படி சமரசம் பேசுவது? ஹானின் வார்த்தைகள் விவகாரங்களைத் தாமதப்படுத்துவதற்கும் கிளர்ச்சியைத் தற்காப்பதற்குமான அவரது முயற்சியையே காட்டுகின்றன,” என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் பார்க் சான் டே கூறினார்.
திரு ஹானை பதவியிலிருந்து நீக்க தனது கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.